வடக்கு – கிழக்கு மக்களுக்கென விசேடஅதிஷ்ட இலாபச்சீட்டு – அபிவிருத்தி லொத்தர் சபையினால் அறிமுகம்!

Wednesday, September 7th, 2022

வரலாற்றில் முதற்தடவையாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ்பேசும் மக்களுக்கென புதிய அதிஷ்ட இலாபச் சீட்டொன்றை அபிவிருத்தி லொத்தர் சபை நேற்று உத்தியோகபூர்வமாக  அறிமுகம் செய்தது.

வலம்புரி என்ற பெயரில் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜிட் குணரட்ன நாரகல தலைமையில் லொத்தர் சபையின் தலைமையகத்தில் வைத்து அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இந்த அதிஷ்ட இலாபச் சீட்டின் பெறுமதி ரூபா 50.00ஆக அமைந்துள்ளது.

நேற்றுமுதல் சந்தையில் விற்பனைக்கு விடப்பட்டுள்ள இந்த அதிஷ்ட இலாபச் சீட்டு அடுத்துவரும் இரு மாதங்களுக்கு சந்தையில் விற்பனை செய்யப்பட உள்ளதோடு சீட்டிழுப்பு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக இடம்பெறும் என்று அபிவிருத்தி லொத்தர் சபையின் பொதுமுகாமையாளர் அனுர ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

இவ்வைபவத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய பொதுமுகாமையாளர், இந்த அதிஷ்ட இலாபச் சீட்டில் மூன்று இலக்கங்களுடன் ராசி அடையாளம் பொருந்துமாயின் இருபது இலட்சம் பணப்பரிசும், மூன்று இலக்கங்கள் மாத்திரம் பொருந்துமாயின் ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசுகளும், இரண்டு இலக்கங்கள் பொருந்துமாயின் ஐநூறு ரூபா பணப்பரிசும் யாதாயினும் ஒரு இலக்கம் அல்லது ராசி அடையாளம் பொருந்துமாயின் ஐம்பது ரூபா பணப்பரிசில்கள் பலவற்றையும் வெற்றி பெற முடியும் என்று குறிப்பிட்டார்.

அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் இவ்வைபவத்தில் உரையாற்றிய போது, வடக்கு கிழக்கு மக்களுக்காக அவர்களது மொழியிலேயே முதன் முறையாக அதிஷ்ட இலாப சீட்டொன்றை நாட்டுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமை அடைகின்றோம்.

அபிவிருத்தி லொத்தர் சபையின் பணிகளை விஸ்தரிப்பது தொடர்பில் மாவட்ட மட்ட விற்பனை முகர்வர்களுடன் நடத்திய சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்களின் பிரதிபலனாகவே இவ்வாறான அதிஷ்ட இலாப சீட்டொன்றை நாட்டுக்கு அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுத்து இருக்கின்றோம் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: