வடக்கு கல்வி அமைச்சின் செயலர் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

Friday, December 1st, 2017

வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலர் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வளலாய் அமெரிக்கமிசன் பாடசாலைக்கு இந்திய அரசின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட வேண்டிய மாடிக்கட்டடத்தை மாற்றி அமைத்தது தொடர்பாக மூன்று பெற்றோரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், பாடசாலைக் கட்டட வேலைப் பகுதிப் பொறியியலாளர், யாழ்ப்பாணக் கல்வி வலயப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் (திட்டமிடல்) ஆகிய நான்கு பேருக்கும் எதிராக இந்த முறையீடு செய்யப்பட்டுள்ளது.

பெற்றோரின் முறையீட்டை ஏற்றுக்கொண்டு மனித உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளர் விசாரணைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.

கட்டடவசதி இன்றி வளலாய் பொதுநோக்கு மண்டபத்தில் செயற்பட்டுவரும் வளலாய் அமெரிக்கமிசன் பாடசாலைக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான நிதி உதவியை இந்திய அரசு வழங்கியுள்ளது. இந்த நிதியைப் பயன்படுத்தி 90 அடி நீளம் 25 அடி அகலத்தில் மாடிக்கட்டத்தைக் கட்டுவது என பாடசாலை சமூகத்திற்கு அதிகாரிகளால் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

அந்த வாக்குறுதி மீறப்பட்டுள்ள நிலையில் பெற்றோர் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி அதிகாரிகள் மீது இலங்கை மனித உரிமைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய ஆணையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

Related posts: