வடக்கின் முதல்வர் விக்னேஸ்வரனது செயற்பாட்டைக் கண்டித்தார் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா…!

Sunday, June 5th, 2016
வடக்கு மாகாணசபையில் எடுக்கப்படும் தீர்மானங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே முதலமைச்சர் அனுப்புகிறார். நானும் இங்கிருந்துதான் தெரிவு செய்யப்பட்டேன். முதலமைச்சருடைய செயற்பாட்டை நான் நிராகரிக்கின்றேன் என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சரும் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவருமான திருமதி விஜயகலா மகேஸ்வரன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
வடமராட்சி தெற்கு மேற்கு (கரவெட்டி) பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று (2016.06.04) சனிக்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் முற்பகல் 9.30 மணியளவில் இடம்பெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு விஜயகலா ஆவேசமடைந்தார்.
கரவெட்டி அம்பம் வைத்தியசாலை தொடர்பாகப் பேசப்பட்ட போது, வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் மாகாணசபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது தொடர்பாகவும் தெல்லிப்பளை வைத்தியசாலை தொடர்பாக சில உதாரணங்களை முன் வைத்துக் கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருந்தார். இதன்போது குறுக்கிட்ட சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் வடக்கு முதலமைச்சருடைய செயற்பாட்டை நிராகரிப்பதாக ஆவேசத்துடன் தெரிவித்தார்.
தேசியக் கட்சியையோ பெரும்பான்மைக் கட்சியையோ நான் இங்கு வளர்க்கவில்லை எனவும் தெற்கிலிருந்து 23 ஆயிரம் குடும்பங்கள் வடக்கில் அமரச் செய்யப்படப் போகிறார்கள் எனவும் தெரிவித்தார். வழமை போன்று கடந்த ஆட்சியை விமர்சிப்பதை அவர் மறக்கவில்லை. வெள்ளைவான் கடத்தல் இடம்பெற்றதாகவும் அதனால் விதவைகள் உருவானார்கள் எனவும் கூறினார். ஆனால் கடந்த ஆட்சியில் குடாநாட்டில் வர்த்தகர்கள் மீது அசிற் வீச்சுக்கள் இடம்பெற்றதைப் பற்றி அவர் வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பல தீர்மானங்களை நிறைவேற்றிக் கொண்டிருந்த இணைத் தலைவர்களில் ஒருவரான ஆபிரகாம் சுமந்திரன் அவர்கள் நாய்களுக்கு லைசென்ஸ் வழங்க வேண்டும் எனவும் ஏனைய நாய்களுக்கு கருத்தடை செய்து விடவேண்டும் எனவும் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்து நிறைவேற்றினார். அத்துடன் மாகாண ஆசிரியர்களது நியமனம் தொடர்பாக அவர்களது போராட்டங்களை கேலிசெய்து சிரித்துக் கொண்டதையும் காணமுடிந்தது.

Related posts: