வஞ்சனை செய்வாரடி கிளியே!  அவர் வாய்ச் சொல்லில் வீரரடி!!

Saturday, July 30th, 2016

தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்திற்கான தீர்வானது அரசியல் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டதாகவும், வடக்கு கிழக்கு இணைந்த மாகாண அலகாகவும், இறைமை பகிரப்பட்டதாகவும் அமைய வேண்டியது அவசியமாகும்.

அத்தகையதான தீர்வை இலக்காகக் கொண்டே மூன்று தசாப்தத்திற்கும் மேலாக பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் பெறுமதிமிக்க உடமைகளையும் எமது மக்கள் இழந்துள்ளனர். இந்த இழப்புக்களையும், தியாகத்தையும் துஷ்பிரயோகம் செய்தே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசியல் இலாபங்களையும், சுகபோகங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது பதிவில் –

2016ஆம் ஆண்டு நடுப்பகுதிக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வைப்பெற்றுக்கொடுப்பதாக தேர்தல்களில் வாக்குறுதி வழங்கியே கூட்டமைப்பினர் வாக்குகளை அபகரித்து பதவிகளைப் பெற்றுக் கொண்டபின்னர் 2016 ஆண்டு நடுப்பகுதியில் தீர்வைப் பெறுவது சாத்தியமில்லை என்றும், பின்னர் 2016ஆம் ஆண்டு இறுதிக்குள் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவதாகவும் கூறியவர்கள், பின்னர் தாம் அவ்வாறு கூறியது அது ஒரு கணிப்பு என்றும் கூறியவர்கள்

ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு என்று கூறும் தென் இலங்கை அரசியல்வாதிகளுடன் கூட்டமைப்பினர் களியாட்டங்களில் மகிழ்ந்து குலாவிக்கொண்டும், தமிழ் மக்களிடத்தில் ‘நாங்கள் சமஸ்டி அடிப்படையிலேயே தீர்வைப் பெறுவோம்’ என்றும் கூறுகின்றார்கள்.

”எமது அடிப்படை அபிலாஷைகளை அடையக் கூடியவகையில் அரசியல் சாசனம் உருவாக்கப்படுமாக இருந்தால் அதை எமது மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்’ என்று இலங்கைக்கு வருகை தந்திருந்த கனடாவின் வெளிவிவகார அமைச்சர் ஸ்டேபன் டையோனிடம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

கூட்டமைப்பினர் இதுவரை தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் என்பது எவ்வாறான அரசியல் சாசனம் என்பதை தெளிவாக வரையறை செய்துகொள்ளவில்லை. ஆகையால் காலத்துக்கு காலம், நபர்களுக்கு நபர்கள் வேறுபட்ட சந்தர்ப்பங்களில் தெளிவற்ற சொற்பிரயோகங்களை கூட்டமைப்பினர் கூறிவருகின்றனர்.

இவற்றில் முக்கியமான விடயமானது, வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடமும், சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகளிடமும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான தீர்வு தொடர்பாக பல்வேறு விடயங்களைக் கூறும் இவர்கள் அதை ஏன் அரசாங்கத்திடம் கூறுவதில்லை. அரசின் முக்கிய வட்டங்களுக்குள் அங்கத்துவம் வகிக்கும் கூட்டமைப்பினர், அவற்றில் கூட தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பில் காத்திரமான கோரிக்கைகளை முன்வைப்பதில்லை.

அரசோடு இணக்க அரசியல் நடத்துகின்ற கூட்டமைப்பு இதுவரை தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை தொடர்பாகவோ, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவோ, காணாமல் போனவர்கள் தொடர்பாகவோ, படையினர் வசமுள்ள தமிழ் மக்களின் காணிகளின் விடுவிப்புத் தொடர்பாகவோ இதுவரை ஆக்கபூர்வமான எந்தப் பேச்சுவார்த்தைகளையும் நடத்தவும் இல்லை, நடத்துவதற்கான கோரிக்கையை அரசாங்கத்திற்கு விடுக்கவும் இல்லை.

கடந்த ஒருவருடமாக வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடம் மட்டும் கதை கூறிக் கொண்டு இருக்கின்ற இவர்கள் தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்கு பொய்களைக்கூறி ஏமாற்றிக் கொண்டே இருக்கின்றார்கள் என தெரிவித்துள்ளார்.

Related posts: