ரிஷாத் வீட்டில் பணி புரிந்த 11 பெண்களில் 9 பேரிடம் வாக்குமூலம் பதிவு – குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவிப்பு!

Sunday, August 1st, 2021

ரிஷாத் வீட்டில் பணி புரிந்த 11 பெண்களில் 09 பேரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யபட்டுள்ளன என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த வீட்டில் பணி புரிந்த 11 பெண்களில் 9 பேரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யபட்டுள்ளன அத்தோடு உத்தியோகபூர்வ இல்லத்தில் சில அறைகள் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் வீட்டில் பணியாற்றியவேளை தீக்காயங்களுடன் உயிரிழந்த சிறுமியின் மரணங்கள் குறித்து கிடைத்த ஆதாரங்களை ஆராய்ந்தவேளை சம்பவம் வீட்டின் வேறு இடத்தில் இடம்பெற்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.

சம்பவம் நடந்த இடத்தை வேண்டுமென்றே மாற்றியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விசாரணையாளர்கள் மண்ணெண்ணை போத்தலின் மூடி போத்தலிற்கு அருகே காணப்பட்டதை கண்டுள்ளனர், அதன் மூலம் அது தற்செயலான சம்பவம் என காண்பிப்பதற்கான முயற்சி இடம்பெற்றுள்ளது என சிரேஸ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தீலிப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இது அந்த சம்பவம் வீட்டின் வேறு பகுதியில் இடம்பெற்றுள்ளதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது, சந்தேகத்தை மறைப்பதற்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது என அவர் தெரிவிததுள்ளார்.

பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு இரண்டு மணித்தியாலங்கள் எடுத்துள்ளமையும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது எனினும் அந்த வீடடில் அவ்வேளை இரண்டு வாகனங்கள் காணப்பட்டன இரண்டு வாகனச்சாரதிகள் காணப்பட்டனர் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட வாக்குமூலங்கள் தெரிவித்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சம்பவம் இடம்பெற்ற மறுநாள் தான் அந்த வீட்டிற்கு சென்றவேளை பொலிஸ் சீருடையில் காணப்பட்ட ஒருவரை எதிர்கொண்டதாகவும் அவர் இந்த விடயத்தை பெரிதுபடுத்தவேண்டாம் பொலிஸாரிடம் எடுத்துச்செல்லவேண்டாம், அமைதியாக முடித்துக்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கினார் என சிறுமியின் சகோதரர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர் நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் நான்குமாதம் பணியாற்றியுள்ளார்,தன்னை துன்புறுத்துகின்றனர் என அவர் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து அவரை வீட்டிற்கு அழைத்துச்செல்வதற்கு தந்தை பலமுறை அந்த வீட்டிற்கு சென்றுள்ளார், ஆனால் அந்த வீட்டிலிருந்தவர்கள் அவரை திருப்பி அனுப்பிவிட்டனர் என சிரேஸ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்ததை விட அதிக சம்பளத்தை அவர்கள் சிறுமியின் குடும்பத்திற்கு வழங்கியுள்ளனர் அதன் மூலம் பெற்றோர் சிறுமியை வீட்டிற்கு அழைத்துச்செல்வதை தடு;ப்பதற்கான முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர், வழங்கப்படும் மேலதிக சம்பளத்திற்கு உரிய விதத்தில் சிறுமி வேலைபார்க்கவில்லை எனவும அவர்கள் குறிப்பிட்டுள்ளனர் என அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் சிறுமி ஆள்கடத்தலால் பாதிக்கப்பட்டுள்ளார் மேலும் சிறுமியொருவரை வேலைக்கு அமர்த்துவது சட்டவிரோதமானது என்பது ரிசாத்பதியுதீனிற்கு தெரிந்திருக்கவேண்டும், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் எனவும் சிரேஸ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: