யாழ்.மாவட்டத்தில் வீடுகளுக்கு சென்று மருத்துவ பராமரிப்பு சேவை ஆரம்பம் – சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு!

Tuesday, January 11th, 2022

யாழ்.மாவட்டத்தில் வீட்டு பராமரிப்பில் உள்ள நோயாளிகளுக்கான பராமரிப்பு சேவைகளை வழங்கும் பணிகள் எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு வழங்கியுள்ள செய்தி குறிப்பில் மேலும் தெரிவிக்கையில் –

யாழ்.மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் தை மாதம் 18 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டுமுதல் வீட்டில் இருந்து வைத்தியசாலைக்கு அழைத்து வர முடியாத நிலையில் உள்ள முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மோசமடைந்து செல்லும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், படுக்கையில் உள்ள நோயாளர்களுக்கு வீட்டில் வழங்கக்கூடிய மருத்துவ பராமரிப்பு சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

இத்திட்டமானது பருத்தித்துறை, தெல்லிப்பளை, சாவகச்சேரி, ஊர்காவற்துறை போன்ற ஆதார வைத்தியசாலைகள் மூலம் முன்னெடுக்கப்பட உள்ளது. 

இவ்விசேட பராமரிப்பு தேவையானவர்கள் தமக்கு அருகில் உள்ள மேற்கூறப்பட்ட வைத்தியசாலைகளில் ஏதாவது ஒன்றிற்குரிய கீழே வழங்கப்பட்ட தொலைபேசி இலக்கங்களுக்கு காலை 8.00 மணி முதல் மாலை 4.00 வரை அழைப்பதன் மூலம் தமக்கு வழங்கப்பட வேண்டிய பராமரிப்பினை முன்பதிவு செய்ய வேண்டும்.

அதன் பின் அவ் வைத்தியசாலையில் இருந்து மருத்துவ பராமரிப்பு குழுவினர் நோயாளியின் வீட்டிற்கு வருகை தந்து அவர்களுடைய நோய் நிலைமையை ஆராய்ந்து வீட்டில் வழங்கக்கூடிய மருத்துவ பராமரிப்பினை வழங்குவார்கள்.

இதனடிப்படையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு 021 226 3262 என்ற எண்ணுடாகவும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு 021 205 9227 என்ற எண்ணுடாகவும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு 021 227 1150 என்ற எண்ணுடாகவும் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைக்கு 021 221 1660 என்ற எண்ணுடாகவும் பெற்றுக்கொள்ள மடியும் என்பதுடன் இச்சேவை மூலம் அவசர மருத்துவ சேவைகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இச்சேவை மூலம் அவசர தேவைகள் அற்ற பராமரிப்பு மட்டுமே வழங்கப்படும். அவ்வாறு அந்நோயாளிகளுக்கு அவசர மருத்துவ தேவைகள் ஏற்படின் 1990 அவசர அம்புலன்ஸ் சேவையை அழைப்பதன் மூலம் வைத்தியசாலைக்கு செல்ல முடியும். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: