ஆர்னோல்ட்டின் அதிகாரத் துஸ்பிரயோகம்: முற்றுப்புள்ளி வைத்தது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி!

Saturday, May 16th, 2020

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள யாழ் மாநகரசபை முதல்வர் ஆர்னோல்ட் தேர்தல் சட்டங்களுக்கு முரணாக தனது முதல்வர் பதவியின் அதிகாரங்களை பிரதி மேயருக்கு கொடுக்காது தொடர்ந்தும் முன்னெடுத்து வந்த நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சட்டரீதியான நடவடிக்கைகள் காரணமாக தனது பதவியின் அதிகாரங்களை பிரதி முதல்வர் ஈசனிடம் ஒப்படைத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது –

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் வேட்பாளராக யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட்டும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தேர்தல் விதிமுறைகளின் பிரகாரம் வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னார் தனது பதவியிலிருந்து யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல் விடுமுறை பெற்றிருந்திருக்க வேண்டும் என்பதுடன்  அப்பதவியின் அதிகாரங்களை பிரதி முதல்வரிடம் ஒப்படைத்திருக்கவும் வேண்டும்.

ஆனால் ஆர்னோல்ட் அவ்வாறு செய்யாது தனது பதவிக்கான வாகனம் உள்ளிட்ட சில பொருட்களை செயலாளரிடம் ஒப்படைத்துவிட்டு பதவியின் அதிகாரங்களையும் அதன் பொறுப்புக்களையும் தன்னகத்தே வைத்திருந்தார்

இந்நிலையில் கடந்த மாதம் மாதாந்த கூட்டத்தை பிரதி முதல்வரை நடத்துமாறும் ஆர்னோல்ட் ஒரு கடிதம் அனுப்பியிருந்த நிலையில் அது தொடர்பில் சபை அமர்வில் பெரும் களோபரம் எழுந்த நிலையில் சபை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து ஆர்னோல்ட்டின் சட்டவிரோதமானதும் அத்துமீறியதுமான செயற்பாடுகள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தேர்தல் ஆணணைக்குழுவிடம் ஆதாரங்களுடன் முறையீடு செய்திருந்தது.

குறித்த முறைப்பாட்டை அடுத்து தேர்தல் ஆணைக்குழு கடிதம் மூலம் யாழ் மாநகர ஆணையாளருக்கு ஆர்னோல்ட்டின் செயற்பாடுகளை  கட்டுப்படுத்துமாறு கோரியிருந்தது.

இந்நிலையில் தேர்தல் ஆணைக்குழுவின் உத்தரவையும் கண்டுகொள்’ளாத ஆர்னோல்ட் நிதிக்குழு மற்றும் திட்மிடல் குழு கூட்டங்களை நடத்துமாறு பிரதி முதல்வருக்கு கடிதமூலம் கோரியிருந்தார்.

நிதிக்குழுவின் தலைவர் முதல்வராக இருப்பதால் அவர் வருகைதராதவிடத்து அக்குழுவில் உள்ள ஏனைய ஒருவரை தலைவராக தெரிவு செய்தபின் நடத்தலாம் என்ற சட்ட விதிமுறை உள்ள நிலையில் அந்த நிதிக்குழுவில் பிரதி முதல்வர் அங்கம் வகிக்காத நிலையில் அவரை தலைமை தாங்க கூறியது சட்டவிரோதமானதென தெரிவித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மீண்டும் சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.

இந்நிலையில் தனது சட்டவிரோத அதிகார கையாடலை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சட்டரீதியான நடவடிக்கைகள் காரணமாக முதல்வர் ஆர்னோல்ட் நேற்றுமுன்னதினம் பிரதி முதல்வர் ஈசனிடம் வழங்கியுள்ளமையூடாக அவரது அதிகார துஷ்பிரயோகம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


ஒரே நாளில் உலகின் பலம்பொருந்திய பல நாடுகளின் இராஜதந்திரிகளுடன் சந்திப்பு - பசுமைப் பொருளாதாரத்தை கட...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நடத்துவதற்கு எதிர்பார்ப்பு - தேர்தல்கள் ஆ...
பரீட்சைகள் இரண்டையும் ஒரே வருடத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை - கல்வி அமைச்சு அதிரடி தீர்மானம்!