யாழ்.போதனா வைத்தியசாலையில் குருதித் தட்டுப்பாடு – இரத்ததானம் செய்யவதற்கு முன்வருமாறு பொதுமக்களிடம் அவசர கோரிக்கை!

Thursday, November 11th, 2021

நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியவில்லை என யாழ்.போதனா வைத்திய சாலை இரத்த வங்கி  அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அவர்கள் குறிப்பிடுகையில் –  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இருக்க வேண்டிய ஆகக் குறைந்த குருதியின் அளவு 330 பைந்த ஆகும்.

ஆனால் தற்போது இருக்கும் குருதியின் அளவோ 200 பைந்த ஆகும். இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியாத துர்ப்பாக்கிய நிலையில் இரத்த வங்கி காணப்படுகின்றது.

இருக்கின்ற குருதியும் இன்னும் 5 நாட்களுக்கு மட்டுமே போதும். அதன் பின்பு ஏற்படுகின்ற அனர்த்தங்களுக்கோ அல்லது விபத்திற்களுக்கோ, சத்திர சிகிச்சைகளுக்கோ, மகப்பேற்று சத்திர சிகிச்சைகளுக்கோ, குருதிச்சோகை நோயாளர்களுக்கோ மற்றும் ஏனைய நோயாளர்களுக்கோ குருதியை வழங்க முடியாத ஆபத்தான நிலைக்கு இரத்த வங்கி தள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறன நிலை ஏற்புடுகின்ற சந்தர்ப்பங்களில் முதலில் வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் மருத்துவ பீட மாணவர்களின் ஒத்துழைப்பு பெறப்படுவது வழமையாகும்.

ஆனால் தற்போது சுகாதாரதுறை சார்ந்தவர்களுக்கு Coved – 19 இற்கான மேலதிக தடுப்பூசியாக (Booster Dose) Pfizer போட்டுக்கொண்டிருப்பதினால் ஒரு கிழமைக்கு அவர்களிடமிருந்து குருதியை பெற முடியாத நிலையிலுள்ளோம்.

அதேவேளை ஏனைய இரத்த வங்கிகளிடமிருந்தும் குருதியை பெற முடியாத நிலை காணப்படுகின்றது. எமது இரத்த வங்கியின் பொது சுகாதார பரிசோதகர் வழமை போன்று குருதிக்கொடை முகாம் ஒழுங்கமைப்பாளர்களின் ஒத்துழைப்பை கோரிய போதும் கொரோனா நோய் நிலமை காரணமாகவும் மற்றும் விரதங்கள் காரணமாகவும் இரத்ததான முகாம்கள் ஒழுங்கு செய்ய முடியவில்லை.

அத்துடன் தினமும் அதிகளவான குருதிக்கொடையாளர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொணடு கேட்கின்ற போதும் அதில் 10 -15 குருதிக்கொடையாளர்களே இரத்ததானம் செய்கின்றார்கள்.

இது போதாது ஏனென்றால் தினமும் எமது இரத்த வங்கியால் 30 -35 பைந்த் குருதி விநியோகிக்கப்படுகின்றது.

ஆகவே தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த ஆபத்தான நிலையை உடனடியாக தவிர்ப்பதற்கு வட மாகாணத்திலுள்ள இளைஞர் யுவதிகள் இரத்ததானம் செய்யவதற்கு முன்வர வேண்டும் என பாதிக்கப்படவுள்ள உங்கள் உறவுகள் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.

இரத்ததானம் செய்வது தொடர்பாக 021 222 3063 , 077 210 5375 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் இரத்த வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: