யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு தொடர்பில் விசேட கூட்டம்!

Wednesday, August 12th, 2020

யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் முதல் மூன்று இடங்களை பெறுகின்றவர்களின் பெயர்களை ஜனாதிபதியின் தெரிவுக்கென பரிந்துரைப்பதற்காக பல்கலைக்கழக பேரவையின் விசேட கூட்டம் இன்று இடம்பெற்றது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய சுற்றறிக்கைக்கு அமைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக கடந்த மே 15 ஆம் திகதி பல்கலைக்கழகப் பதிவாளரினால் பத்திரிகைகள் மூலமாகக் விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.

அதற்கமைய கிடைக்கப்பெற்ற 7 விண்ணப்பங்களில் ஒன்று உரிய முறைப்படி நிரப்பப்படாத காரணத்தினால் நிராகரிக்கப்பட்டிருந்தது. இதேவேளை, முன்னாள் துணைவேந்தரும், கணிதப் புள்ளிவிபரவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் இ.விக்னேஸ்வரன், உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் கு.மிகுந்தன், வணிக முகாமைத்துவ பீடாதிபதி ரி.வேல்நம்பி, மருத்துவ பீடாதிபதி வைத்திய நிபுணர் எஸ். ரவிராஜ், விஞ்ஞான பீடம், தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றின் முன்னாள் பீடாதிபதியும், கணிதப் புள்ளி விபரவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா, புள்ளி விபரவியல் துறைப் பேராசிரியர் செ. இளங்குமரன் ஆகியோரின் விண்ணப்பங்கள் மதிப்பீட்டுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டு, பேராசிரியர் அபே குணவர்த்தன தலைமையிலான மதிப்பீட்டுக்குழுவிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: