யாழ் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை – தவறிழைத்தவர்களுக்கு தண்டனை நிச்சயம் என யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உறுதி!

Saturday, July 31st, 2021

யாழ்ப்பாணத்தில் இளைஞனை கடத்திச் சென்று சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த லியனகே தெரிவித்துள்ளார்.

அத்துடன் பணத்திற்காக பொலிஸார் வன்முறையில் ஈடுபடுவது தண்டிக்கப்படவேண்டிய ஒன்று என்றும், தவறிழைத்தவர்களுக்கு தண்டனை நிச்சயம் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில்-

யாழ்.மாவட்டத்தில் நல்லிணக்கத்தையும் அமைதியையும் ஏற்படுத்தும் வகையில் பொலிஸார் கடமையாற்றும்வேளை, ஒரு சில பொலிஸ் அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் பணத்துக்காக வன்முறைகளில் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

இவ்வாறு நடந்துகொள்பவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் எனவும் கூறிய அவர், அதற்காக யாழ்.பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்கரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் ஒரு சிலரின் தேவைக்காக பணத்தைப் பெற்று பொலிஸார் செயற்பட்டிருந்தால் அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும்.

குற்றச்சாட்டு எழுந்துள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை உடனடியாக இடமாற்றம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்ட அவர், யாழ்.மாவட்டத்தில் மட்டுமல்லாது நாடுமுழுவதும் அமைதியையும் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப பொலிஸார் ஈடுபட்டுவரும் நிலையில், இவ்வாறான சில பொலிஸ் அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் தவறான வகையில் செயற்படுகின்றமை வருந்தத்தமளிப்பதாகவும்    பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகே மேலும் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: