யாழ்மாவட்டத்தில் ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான உத்தியோகபூர்வ இணையதளங்கள் வடக்கு ஆளுநரால் அங்குரார்ப்பணம்! .

Thursday, January 11th, 2024

யாழ்ப்பாணத்திலுள்ள ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான உத்தியோகபூர்வ இணையதளங்கள் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களால் நேற்று (10.01.2024)  அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று முற்பகல் இந்த இணையதளங்கள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இதனடிப்படையில் வேலணை, வலிகாமம் மேற்கு, நெடுந்தீவு, வடமராட்சி தெற்கு, மேற்கு ஆகிய  பிரதேச சபைகளுக்கும், பருத்தித்துறை நகர சபைக்குமான உத்தியோகப்பூர்வ இணைய தளங்களும் இன்று அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டன.

மக்களுக்காக சேவை புரியக்கூடிய உள்ளுராட்சி நிறுவனங்கள் இவ்வாறு உத்தியோகபூர்வ இணையத் தளங்கள் ஊடாக தங்களின் பணிகளை மேற்கொள்ள எடுத்துள்ள முயற்சிக்கு ஆளுநர் பாராட்டுக்களை தெரிவித்திருந்தார்.

அத்துடன் பொதுமக்கள் தங்களுக்கான சேவைகளை இணையத்தினூடாக பெற்றுக்கொள்வதற்கு  தேவையான வசதிகளையும், வரி உள்ளிட்ட கட்டணங்களையும் இணையதளத்தினூடாக செலுத்துவதற்கான வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என  வடக்கு மாகாண  ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் இதன்போது அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சேவைகளை வழங்குவதன் மூலம் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன், பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும் என ஆளுநர் தெரிவித்துள்ளார். அத்துடன் உள்ளுராட்சி மன்றங்கள் தங்களின் தனித்துவத்தையும் பேண முடியும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் சுட்டிக்காட்டினார்.

ஆளுநரின் ஆலோசனைகளை செவிமெடுத்த அதிகாரிகள், அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ள இணையத்தளத்தில் மேலும் தரவுகளை இணைத்து மக்கள்நேயப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

குறித்த நிகழ்விகன்போது வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், உள்ளுராட்சி மன்ற ஆணையாளர், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இன்றைய நிகழ்வில் கலந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: