யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் அனைத்து மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை – மக்களை எச்சரிக்கிறது வளிமண்டலவியல் திணைக்களம்!

Friday, April 2nd, 2021

நாட்டின் பல பகுதிகளில் மிகவும் வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிடுகையில் –

நாளையதினம் நாட்டின் பல மாவட்டங்களில் அதீத வெப்பத்தால் மக்கள் பாதிக்கப்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, அநுராதபுரம், புத்தளம், குருணாகல், மாத்தளை, கம்பஹா, கொழும்பு, களுத்துறை, பதுளை, காலி, மாத்தறை, பொலநறுவை, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் அதிக அளவு வெப்பமான காலநிலை நிலவும் என எச்சரித்துள்ளது.

அத்துடன் இந்த காலநிலை உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனால் அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளதுடன் நாளையதினம் அதிகமாக நீர் அருந்துமாறும், நிழல் உள்ள இடங்களில் முடிந்த அளவு ஓய்வு எடுக்குமாறும் மக்களிடம் கோரப்பட்டுள்ளது.

அதேநேரம் வீட்டில் இருக்கும் வயோதிபர்கள் மற்றும் நோயாளிகள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்த வேண்டும் என்றும் சிறுபிள்ளைகளை தனியாக வாகனங்களில் விட்டு செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளதுடன் அதிகமாக வெளியிடங்களில் கடினமான சேவை செய்வதனை தவிர்க்க வேண்டும் என்றும் வெள்ளை அல்லது இளம் நிறத்திலான ஆடைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0000

Related posts:

ஆடை ஏற்றுமதி துறை போன்று அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஒளடத ஏற்றுமதி துறையிலும் கவனம் செலுத்தப்படும் -...
2021 ஆம் ஆண்டுக்கான கணக்குகள் இதுவரையில் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படவில்லை - அரச கணக்குகள் பற்றிய க...
மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி !