யாழ்ப்பாணத்தை அச்சுறுத்திவந்த ரவுடிகள் கைது!

Tuesday, May 10th, 2016

யாழ்.குடாவை வாள் வெட்டுச்சம்பவங்களால் அச்சுறுத்தி வந்த பிரதான ஒருங்கிணைந்த குற்றக் குழுவாக கருதப்படும் ‘ரொக் டீம்’ எனும் பெயர்கொண்ட குழுவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ். பகுதியில் கடந்த ஒரு மாத காலத்துக்குள் பதிவான பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் விஷேட விசாரணைகளை ஆரம்பித்த யாழ். பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவின் சிறப்புக் குழுவே இவர்களை கைது செய்துள்ளது.

5 பேர் கொண்ட இந்த கும்பலானது தனு ரொக் எனப்படும் 20 வயதான சந்தேக நபரினால் வழி நடத்தப்பட்டு வந்துள்ளதும் அக்கும்பலில் 18 வயதுடைய யாழ். பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி பயிலும் இரத்தினசிங்கம் செந்தூரன் எனும் மாணவனும் உள்ளடங்குவதாகவும் ஏனைய சந்தேக நபர்களும் அதே பாடாசலையின் பழைய மாணவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றுமுன்தினம்  மாலை பொலிஸார் முன்னெடுத்த சிறப்பு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 2 கைக்குண்டுகள், இரண்டு மோட்டார் சைக்கிள்கள், 3 வாள்கள், கைக்கோடரிகள், இரும்புக் கம்பிகள், பொல்லுகள் என்பன கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் சந்தேக நபர்களுக்கு சுவிஸர்லாந்தில் இருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் பணம் வங்கி ஊடாக அனுப்பட்டுள்ளமையும் அதனை ‘மோட மாமா’ என அறியப்படும் நபர் ஒருவரே அனுப்பியுள்ளதாகவும் அதன் பின்னணி தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து மேலும் அறிய முடிவதாவது,

வடக்கில் பெருகி வரும் வாள் வெட்டு சம்பவங்கள் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையோரை கைது செய்யவும் அவற்றை கட்டுப்படுத்தவும் வட மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் டப்ளியூ.எப்.யூ.பெர்ணான்டோவின் நேரடி கண்காணிப்பில் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜி.கே.பெரேரா, வட மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கே.கணேசநாதன், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் தம்மிக ஜயலத் ஆகியோரின் ஆலோசனைக்கு அமைவாக சிறப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி இது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பானது யாழ்.பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் கேரலகே தலைமையிலான குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிரதான பொலிஸ் பரிசோதகர் கேரலகேயின் கீழ் அதன் குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் முஜித்த, உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீ கஜன் ஆகியோரின் கீழான சிறப்பு விசாரணைக் குழுவினரே  விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதன்போதே, விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைவாக நேற்றுமுன்தினம் மாலை யாழ்ப்பாணம் பகுதியில் வைத்து சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மானிப்பாய் லோட்டன் வீதியை சேர்ந்த தனு ரொக் என அழைக்கப்படும் இந்த குழுவின் தலைவன் எனக் கருதப்படும் மோகன் தனுசன் (20), கல்வியன் காடு, புலவர் வீதியை சேர்ந்த பாடசாலை மாணவனான  ரட்ணசிங்கம் செந்தூரன் (18), கோப்பாய் காளி கோவிலடியை சேர்ந்த கிசோக் என அழைக்கப்படும் பசுபதி கோபால், உரும்பிராய் கிழக்கு பகுதியை சேர்ந்த சிவகுமார் நிசாந்தன்(23) ,கோப்பாய் தெற்கு பகுதியை சேரந்த சிறி ரஞ்சன் இராகுலன் (22)  ஆகியோரே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர்களாவர்.

கைதான சந்தேக நபர்களிடம் சிறப்பு விசாரணைகளை நடத்திய பொலிஸார் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம், நாயன்மார்கட்டு பகுதியிலுள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து அங்கிருந்த இருவர் மீது வாள்வெட்டை மேற்கொண்டமை,  சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒருவரை வாளால் வெட்டி மோட்டார் சைக்கிள் பறித்துச் சென்றமை போன்ற சம்பவங்களுடன் தொடர்பிருக்கின்றமையை உறுதி செய்துகொண்டனர்.

அத்துடன் சுண்டுக்குளி பகுதியில், தென்னிலங்கை சுற்றுலா பயணிகளின் சொகுசு பஸ்ஸின் கண்ணாடியை உடைத்தமை, ஆனைக்கோட்டைப் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடியமை, முதலி கோயில் கொக்குவில் பகுதியில் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிளிளை கோடரியால் கொத்தி சேதம் விளைவித்தமை உள்ளிட்ட 9 குற்றச் செயல்களுடன் தொடர்புள்ளமையையும்  உறுதி செய்துகொண்டுள்ளனர்.

இதனையடுத்து சந்தேக நபர்களை மேலும் விசாரணைக்கு உட்படுத்திய பொலிஸார் அவர்களின் வங்கிக்கணக்குகளில் இருந்த பெருமளவு பணம் தொடர்பிலும் தீவிர விசாரணைகளை நடத்தியுள்ளனர். இதன்போதே சுவிஸ்லாந்தில் உள்ள ‘மோட மாமா’ என  குறிப்பிடப்படும் நபர் ஒருவர் இந்த ரொக் டீம் எனப்படும் குற்றக் குழுவுக்கு நிதியுதவி அளித்துள்ளமைக்கான ஆதாரங்கள் பொலிஸாரிடம் சிக்கியுள்ளன.

இந்நிலையில் குறித்த நபர் சுவிஸ்லாந்தில் இருந்து இந்த குழுவுக்கு யாழில் குற்றங்களுடன் கூடிய சூழலை உருவாக்க பணம் வழங்கினாரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சுவிஸ்லாந்தில் உள்ள நபர் இந்த குழுவுக்கு பணம் வழங்கியமைக்கான காரணம், அதன் நோக்கம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தவே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள யாழ். குற்றத்தடுப்புப் பிரிவு, சந்தேக நபர்கள் ஐவரையும் யாழ். பிரதான  நீதிவான் சதீஷ் குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தி விளக்கமறியலில் வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: