யாழ்ப்பாணத்தில் கலாசார மண்டபம் அமைக்கும்  பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Friday, June 3rd, 2016

யாழ்ப்பாணம் நூலகத்திற்கு அருகில் பதினொரு மாடியில் மாபெரும் கலாசார மண்டபம் அமைக்கப்படுவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல்லை கடந்த வருடம் நாட்டி வைத்திருந்தார். கலாசார மண்டபம் யாழ்ப்பாண மண்ணில் அமைய வேண்டும் என்றும், அதற்கான உதவியை இந்திய அரசாங்கம் தந்துதவ வேண்டும் என்றும், முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களிடம் தமிழ் மக்கள் சார்பில் 50,000 வீட்டுத்திட்டம் உட்பட்ட பல கோரிக்கைகளை நேரடியாகவே நான் விடுத்திருந்தேன்.

அதில் ஒரு கோரிக்கைதான் இந்த கலாசார மண்டபமாகும். எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, இந்திய அரசாங்கம் கலாசார மண்டபத்தை அமைத்துக் கொடுக்க உதவும் என்று இணங்கியிருந்தார்.

இதற்கு அமைவாக கலாசார மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் மோடி அவர்களின் ஆட்சிக்காலத்திலேயே கலாசார மண்டபத்திற்கான கட்டுமானப் பணிகளையும் முழுமையாக முடித்துக் கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அவரது முகநூலில் மேலும் பதிவிடப்பட்டிருப்பதாவது –

120கோடி ரூபா செலவில் அனைத்து வசதிகளையும் கொண்டமைந்ததாக கலாசார மண்டபம்; தமிழ் மக்களுக்கு கிடைக்கப்பெறுவதை, அரசியல் காழ்ப்புணர்வு கொண்டு யாரும் தடுத்து நிறுத்திவிடக்கூடாது.

ஆட்சி அதிகாரமானது யாருக்கும் நிரந்தரமானதல்ல. அது மாறி மாறி நிகழும் ஒரு அரசியல் நிகழ்வு.

அதை நிரந்தரமானதாக எண்ணிக்கொண்டு சில தமிழ் அரசியல் பிரமுகர்கள் கலாசார மண்டபம் அமைக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த முயற்சித்து வருகின்றமை கவலையளிக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் கலாசார மண்டபம் அமைய வேண்டும் என்பதை டக்ளஸ் தேவானந்தாவின் திட்டமாக அரசியல் காழ்ப்புணர்வோடு சிந்திக்க வேண்டாம்.

அது மக்களின் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களை வளர்த்தெடுத்து அவற்றைப் பாதுகாப்பதற்கும், எமது சமூகத்தின் எதிர்கால ஆற்றல் மற்றும் ஆளுமை வளர்ச்சிக்கும் உந்துதலாகவும் அவசியமானதாகவும்.

இருக்கும் என நான் நம்புகின்றேன்.

‘யார் குற்றியேனும் அரிசியானால் சரிதான்’ என்று கூறுவதைப்போல், நான் ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்பதற்காக எமது சமூகத்திற்காக நான் பெற்றுக் கொண்டுவந்த பயன்மிகுந்த திட்டங்களை வேறு யாரும் தொடரக்கூடாது என்று ஒருபோதும் எண்ணவில்லை.

மக்களுக்கு அவசியமானதும் தேவையானதுமான திட்டங்களை தொடர்வதற்கு கட்சி பேதங்களுக்கு அப்பால் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

Related posts: