முன்னாள் போராளிகளின் வாழ்வு குறித்து வடமாகாண சபைக்கு கரிசனை இல்லையா? – ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தவநாதன் கேள்வி!

Wednesday, August 10th, 2016

போராடிய அனைவரும் ஒரு பொது நோக்கத்துக்காகத்தான் போராடினர். அவர்களது போராட்டங்கள் திசைமாறி போனதால் இன்று சமுதாயத்தில் வாழ்க்கைக்காக பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் தற்போது புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட போராளிகளது மரணம் தொடர்பாக பல்வேறுபட்ட செய்திகள் நாள்தோறும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இவர்களது வாழ்வியலுக்கான பாதுகாப்புக் குறித்து வடக்கு மாகாணசபை இன்று வரை எந்தவிதமான செயற்பாட்டு வடிவிலான நகர்வுகளையும் முன்னெடுக்கவில்லை என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவநாதன் சபை அமர்வின்போது தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

முன்னாள் போராளிகளின் மர்ம மரணங்களின் பின்னணிகள் ஆராயப்பட வேண்டியது அவசியமாகும் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஏற்கனவே வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் புனர்வாழ்வு கொடுக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பலர் மர்மமான முறையில் மரணமடைந்து வருகின்றனர் என செய்திகளில் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. இதற்கான காரணம் தொடர்பில் வெளிப்படையான விசாரணைகள் நடத்தப்படுவதுடன் அவர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவேண்டும்.

குறித்த போராளிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த மத்திய அரசு தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தும் வடக்கு மாகாண சபை இது விடயத்தில் வெறுமனே பேசிக்கொள்கின்றனரே தவிர முறையான நடவடிக்கைகள் எதனையும் எடுத்திருப்பதாக தெரியவில்லை.

தமது வாழ்வு குறித்த அச்சத்தில் இருக்கும் முன்னாள் போராளிகளுக்கு ஒரு திடமான செய்தியை கொடுப்பதற்கான செயற்றிட்டத்திற்கு இன்று நிதி இல்லை என கூறுகின்றீர்கள்.  ஆனால் நாளாந்தம் மாகாண சபையும் உறுப்பினர்களும் செய்யும் ஆடம்பர நிகழ்வுகளுக்கு செலவு செய்ய நிதி இருக்கின்றது. அப்படியானால் குறித்த போராளிகள் மீது உங்களுக்கு கரிசனை இல்லையா என தவநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related posts: