முன்னாள் இராயாங்க அமைச்சர் பாலித்த தெவரப்பெரும அகால மரணம் – மரணத்தை முன்கூட்டியே அறிந்திருந்த மூவின மக்களையும் சோகத்தில் ஆழ்த்திய அரசியல்வாதி!

Wednesday, April 17th, 2024

மின்சாரம் தாக்கியதில் முன்னாள் பிரதி அமைச்சரும் எம்.பியுமான பாலித்த தெவரப்பெரும காலமானார்.

இவர் தனது தோட்டத்தில் உரமிட்டுக் கொண்டிருந்த போது, அதில் அங்குமிங்கும் மின்விளக்குகள் இடப்பட்டிருந்த நிலையில் தரையில் இருந்த கவசமிடப்படாத மின்கம்பி ஒன்றை மிதித்த நிலையில் மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்துள்ளார்.

அங்கிருந்த தொழிலாளர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும், சுமார் 40 நிமிடங்களின் பின்னரே அவர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1960 மே 03 இல் பிறந்த பாலித குமார தெவரப்பெரும, ஐ.தே.க. களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக 2010 முதல் 2020 வரை பதவி வகித்ததோடு, உள்நாட்டு அலுவல்கள், வயம்ப அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சராகவும் 2016 ஏப்ரல் 06 முதல் 2018 மே 01 திகதிவரை அணியாற்றியுள்ளார். அத்துடன் வனஜீவராசிகள் பிரதி அமைச்சராகவும் 2018 மே 01 முதல் 2019 நவம்பர் 19 வரை பதவி வகித்துள்ளார்.

ஏழை எளிய மக்களுக்கு உதவி புரிவதில் முன்னிற்பவர் எனும் பெயர் கொண்ட பாலித்த தெவரப்பெரும, பொதுமக்கள் சார்ந்த பல்வேறு விடயங்களுக்காக உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளார் என்பதும் மக்கள் மனதில் அவர் இடம்பிடிக்க காரணமாக அமைந்த விடயங்களாகும்.

இந்நிலையில் தென்னிலங்கையில் மனிதநேயம் கொண்டவரான முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரின் இழப்பு செய்தி நாட்டிலுள்ள மூவின மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரதியமைச்சராக செயற்படும் அரசியல்வாதி என்ற நிலையை கடந்து தானும் சாதாரண மனிதன் என்பதை நிரூபிக்கும் வகையில் அவரின் வாழ்க்கை நடைமுறைகள் காணப்பட்டிருந்தன.

இந்நிலையில், தனது மரணத்திற்கு ஏற்கனவே தயாராக இருப்பதாக பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.

மரணிக்க சில வாரங்களுக்கு முன்னர் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தனது மரணம் நிகழ்ந்தால் அதற்கான பெரிய செலவுகள் எதனையும் செய்யக் கூடாது என தனது பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தன்னை அடக்கம் செய்ய பயன்படுத்தும் பிரேத பெட்டிக்கு கூட சிறிய தொகையை செலுத்திவிட்டு அந்த பணத்தில் வீட்டிற்கு வரும் சிறுவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் பொருட்களை பெற்றுக் கொடுக்குமாறு கூறியுள்ளேன்.

மேலும் எனது மரணத்திற்கு மக்கள் கூட்டமாக வருவார்களா என தெரியவில்லை. அதிகாரத்தில் இருந்தால் மாத்திரமே மக்கள் ஒருவரை தேடி வருவார்கள்.

அதனால் யாருக்காகவும் காத்திருக்க வேண்டாம். நால்வர் இணைந்து என்னை தூக்கி சென்று புதைத்தால் போதும் என சிறிய மகனிடம் கூறிவிட்டேன்.

எனது பெரிய மகன் எனக்கு முன்னரே உயிரிழந்துவிட்டார். நான் எவருக்கும் தொல்லை கொடுத்ததில்லை. சொத்துக்கள், வாகனங்கள் மீது எனக்கு எவ்வித ஆசையும் இல்லை.

பதவியில் இருந்த காலத்திலும் கிராமங்கள் முழுவதும் நடந்தே செல்வதனை பழக்கமாக கொண்டுள்ளேன். மக்கள் சொத்துக்களை கொள்ளையடித்து வீடுகள், சொத்துக்களை சேர்த்துக் கொள்ளவில்லை. மக்களின் அன்பை மட்டுமே சம்பாதித்துள்ளேன்.

நான் எனக்கான தேவைகளை தனியாக தேடிக் கொண்ட ஒருவன் . நான் யாருக்கும் சுமையாக இருந்ததில்லை. செல்லும் இடம் எல்லாம் மக்கள் என்னை சூழ்ந்துக் கொள்வார்கள்.

நான் சுயமாக வாழ்ந்த மனிதன் என்று நான் இல்லாத போது வரலாற்றில் இருப்பேன் என நினைக்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்நிலையில்  மறைந்த ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதி அமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை குடும்ப மயானத்தில் இடம்பெறவுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: