மீதொட்டமுல்ல அனர்த்தம்; பகிரங்க மன்னிப்பு கோரியது அரசு!

Monday, April 17th, 2017

கொழும்பு – மீதொட்டமுல்ல பிரதேசத்தில் குப்பை மேடு சரிந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களிடம் அரசாங்கம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது.

அனர்த்தத்தின் போது இடம்பெயர்ந்துள்ள மக்களின் பிரச்சினையை விரைவில் தீர்ப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

மாத்தறை – தெவிநுவர ரஜமகா விகாரையில் நேற்றைய தினம் மாலை இடம்பெற்ற சமய நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

“இடம்பெற்ற விபத்துக்காக அரசாங்கம் என்ற வகையில் அந்த மக்களிடம் நாங்கள் மன்னிப்பு கேட்கின்றோம். இந்த விபத்து இடம்பெறுவதற்கு முன்னர் மாற்று இடத்தை அடையாளம் கண்டிருந்தோம். இடமாற்றம் செய்வதற்கும் முடிவெடுத்திருந்தோம். எனினும் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு வெளியிட்டனர். அதுமட்டுமன்றி மதத் தலைவர்களும் எதிர்ப்பை வெளியிட்டனர். சில இடங்களில் நாங்கள் நீதிமன்ற உத்தரவையும் பெற்றோம். குப்பை பிரச்சினையானது அனைத்து நாடுகளிலும் நிலவுகிறது. நாங்கள் அதற்கு தீர்வுகளைத் தேடி கொண்டுவர முயற்சிக்கின்றோம். அனர்த்தத்திற்கு முகங்கொடுத்திருக்கும் மக்களின் உயிரைப் பாதுகாப்பதே எமது முதற்கட்ட கடமையாகும்” – என்றார்.

Related posts: