மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதை தவிர்க்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி!

Tuesday, November 1st, 2016

வலிகாமம் வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளில் 450- ஏக்கரக்கும் க்கும் மேற்பட்ட காணிகளை, அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்காக யாழ் அரசாங்க அதிபரிடம் ஒப்படைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

காங்கேசன்துறை பகுதியில் மீள்குடியேற்ற அமைச்சின் நிதியில் நல்லிணக்கபுரம் என்று பெயரிடப்பட்டுள்ள வீட்டுத் திட்டத்தில் இராணுவத்தினரால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 100 வீடுகளை, வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்துள்ள காணிகளற்ற குடும்பங்களுக்கு கையளித்தபோது அவர் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கின்றார்.

கடந்த ஒரு வருட காலமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுடைய காணிகளைக் கையளித்து. அவர்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காணிகளை மீள கையளிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார்.

அண்மையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து கவலை வெளியிட்ட ஜனாதிபதி அது குறித்து சுதந்திரமான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களின் வறுமை நிலையைப் போக்கி அவர்களைப் பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்கும் அரசு நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றது. எனினும் இந்த செயற்பாடுகளை முன்னெடுக்கும்போது ஏற்படுகின்ற தடைகளைக் கடந்து அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார்.

நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாமலிருப்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லிணக்கத்தையும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்திருப்பதாகக் தெரிவித்துள்ளார்.

556752159Jana

Related posts: