மிகக் குறுகிய நாளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களிடம் அடிவாங்கும் – வடக்கு மாகாண சபையில் அன்ரனி ஜெகநாதன் சூளுரை!

Thursday, August 25th, 2016

மிகக் குறுகிய நாட்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களிடம் அடிவாங்கப்போகின்றது. அதற்கான சந்தர்ப்பத்தை இன்று தமிழ் மக்கள் எதிர்பார்த்தவண்ணமுள்ளனர் என வடக்கு மாகாணசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரும் பிரதி அவைத்தலைவருமான அன்ரனி ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் வடக்கு மாகாண சகபையின் 60 வது அமர்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில் –

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் நாடாளுமன்ற உறுப்பினர்களே அதிக கவனம் செலுத்தவேண்டும். அதிலும் எமது கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே வடக்கில் பெரும்பான்மையாக உள்ள நிலையில் இதுவரை தமிழ் மக்களுக்கான எதனையும் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

தேசிய ரீதியிலான தமிழ் மக்களின் பிரச்சினைக்கு மாகாண சபையினால் தீர்வு காணமுடியாது.  தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியாக இருந்துகொண்டு மத்திய அரசில் துணை அவைத்தலைவர் பதவியையும் பெற்றுக்கொண்டு நல்லாட்சி அரசுடன்  இணக்க அரசியலை மேற்கொண்டு இருப்பதாக தெரிவித்து  இதுவரை தமிழ் மக்களுக்கு எந்தவொரு தீர்வுகளையும் பெற்றுக்கொடுக்காது ஏமாற்றி வருகின்றனர். மக்களுக்கு நேர்மையாக சேவை செய்ய வேண்டும் என நான் வெளிப்படையாக கூறும் பட்சத்தில் என்மீது தாக்குதல் நடத்துகின்றனர். ஆனால் நான் தமிழ் மக்களது நலன்கருதி பல செயற்பாடுகளை முன்னிறுத்தி வந்துள்ளேன்.

இந்நிலையில் எனது பதவியை இராஜினமா செய்வது தொடர்பாக நான் சிந்தித்து வருகின்றேன்  என கூறிய அவர், முல்லைத்தீவு மாவட்டத்தில் நானும் சக உறுப்பினர் துரைராஜா ரவிகரனும் தவிர்ந்த வேறு எந்தவொரு தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சென்றால் மக்களின் பலத்த எதிர்ப்புக்கு உள்ளாவர்கள் என்பதுடன் மக்களிடம் அடிவாங்கும் நிலைக்கும் தள்ளப்படுவர்  எனவும் தெரிவித்திருந்தார்.

Related posts: