மார்ச் 30 அனைத்துலக சுழியக் கழிவு தினம் – நாளை யாழ் நகரில் விசேட நிகழ்வுகள்!

Friday, March 29th, 2024

அனைத்துலக சுழியக் கழிவு தினமான மார்ச் 30ம் திகதி (நாளை) வடமாகாண சுற்றுலா சேவைப் பிரிவினரின் ஒழுங்குபடுத்தலில், யாழ் மாநகர பகுதியில் தூய நகரை உருவாக்குவதை இலக்காகக் கொண்ட ‘யாழ் ஆரோக்கிய பவனி தூய்மையாக்கல் பணியும், விழிப்புணர்வு செயற்பாடும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியத் துணைத் தூதரகம், யாழ் மாநகரசபை, யாழ் பிரதேச செயலகம், தொல்லியல் திணைக்களம் மற்றும் யாழ் பொலிஸாரின் நேரடிப் பங்களிப்பு மற்றும் ஆதரவுடன் மேற்கொள்ளப்படவிருக்கும் இந்தத் திட்டத்தின்கீழ், யாழ் நகரின் பிரதான வீதிகள் சிலவற்றின் ஊடாகவும், யாழ்ப்பாணத்தின் சுற்றுலா ஈர்ப்பு வலயமாக காணப்படும் மணிக்கூட்டுக் கோபுரம்முதல் பண்ணை சுற்றுவட்டம் வரையிலான பகுதியிலும் தூய்மைக்கால் பணி முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ் ஆரியகுளம் சந்திப் பகுதியில் காலை 7 மணியளவில் ஆரம்பிக்கும் இந்தப் பணி, 3 வீதிகளூடாக யாழ் பண்ணைப் பகுதி வரையில் மேற்கொள்ளப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரு அணியினர் ஆரியகுளம் சந்தியிலிருந்து பருத்தித்துறை வீதியூடாக வைத்தியசாலை வீதியையடைந்து, அங்கிருந்து மகாத்மா காந்தி வீதியூடாக, மணிக்கூட்டுக் கோபுரம், பொது நூலகம், துரையப்பா விளையாட்டரங்கு, யாழ் கோட்டை, பண்ணை நடைபாதை ஊடாக பண்ணைச் சுற்றுவட்டத்தை அடைவர்.

இரண்டாவது அணி, ஆரியகுளம் சந்தியிலிருந்து ஸ்ரான்லி வீதியூடாக முட்டாசு கடைச் சந்தியை அடைந்து, கே.கே.எஸ். வீதியூடாக, தபால் கந்தோர் சந்தியைக் கடந்து சுற்றுவட்ட வீதியூடாக பண்ணைச் சுற்றுவட்டத்தை அடையும்.

மூன்றாவது அணி, யாழ் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதான வீதி தண்ணீர் தாங்கி பகுதியிலிருந்து ஆரம்பித்து கடற்கரை வீதியூடாக பண்ணை சுற்றுவட்டத்தை வந்தடையும்.

பண்ணை சுற்றுவட்டப் பாதையை அனைத்து அணிகளும் வந்தடைந்ததும், காலை 9.30 மணியளவில ரில்கோ உல்லாச விடுதியினரின் ஏற்பாட்டில் தாகசாந்தி வழங்கப்படுவதுடன், பண்ணை நடைபாதை, யாழ் கோட்டை உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் பகுதிகளை நிரந்தரமாக தூய்மையாகப் பேணும் வழிவகைகள் குறித்த கலந்துரையாடலும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இந்த நிகழ்வில், இந்தியத் துணைத் தூதுவர், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், யாழ் மாநகர ஆணையாளர், மாநகரசபையின் உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் மற்றும் யாழ் வணிகர் கழக பிரதிநிதிகள், உல்லாச விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: