மானிய விலையில் அத்தயாவசிய பொருட்கள் : கிளிநொச்சி மக்களுக்கு அரச அதிபரின் விசேட அறிவிப்பு!

Wednesday, May 6th, 2020

பருப்பு, ரின்மீன்களிற்கு மானிய விலை நீக்கப்பட்டுள்ள நிலையிலும் கிளிநொச்சி மக்களிற்கு தொடர்ந்தும் வழங்க முடியும் என கிளிநாச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும் உணவு ஆணையாளரிடமிருந்து தலா 25.000 கிலோ சீனி, பருப்பு, தகரத்தில் அடைக்கப்பட்ட மீன், 2500 கிலோ வெள்ளைப்பூடு ஆகியவை பெறப்பட்டு அவை பல நோக்கு கூட்டுறவு சங்கம் ஊடாக மக்களிற்கு நியாய விலையில் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் –

இரண்டாவது தடவையாக உணவு ஆணையாளரிடமிருந்து குறித்த பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பருப்பு 4500 கிலோ கிராம், 10 ஆயிரம் கிலோ சீனி, 20 ஆயிரம் ரின் மீன்களும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

பருப்பு மற்றும் ரின் மீன்களிற்கான மானிய விலை அரசினால் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் குறித்த பொருட்களை மானிய விலையின் அடிப்படையில் தாம் கொள்வனவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதற்கமைவாக போக்குவரத்து செலவுகளுடன் அவற்றை தொடர்ச்சியாக கிளிநொச்சி மக்களிற்கு மானிய விலையிலேயே கூட்டுறவு சங்கங்கள் ஊடாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்த வகையில் கிளிநொச்சி மாவட்ட மக்கள் குறித்த பொருட்களை அவ்வந்த பிரதேசங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: