மழை அல்லது இடியுடன் கூடிய மழை தொடரும்: திருநெல்வேலி வானிலை ஆய்வு நிலையப் பொறுப்பதிகாரி தெரிவிப்பு

Thursday, November 9th, 2017

இடைநிலைப் பருவப் பெயர்ச்சிக் காலநிலை காரணமாக எதிர்வரும் நாட்களில் பிற்பகல்-02 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகின்றது. இடி, மின்னலுடன் கூடிய மழை வீழ்ச்சி நிலவுகின்ற சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும். எனவே, பொதுமக்கள் இடி, மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் இழப்புக்களைக் குறைப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் கடற்தொழிலாளர்கள் அவதானமாகச் செயற்படுமாறு திருநெல்வேலி வானிலை ஆய்வு நிலையப் பொறுப்பதிகாரி ரி. பிரதீபன் தெரிவித்துள்ளார்.

தொடரும் மழையுடனான காலநிலை தொடர்பாக திருநெல்வேலி வானிலை ஆய்வு நிலையப் பொறுப்பதிகாரி ரி. பிரதீபன் யாழ். குடாநாட்டு மக்களுக்கு முக்கிய அறிவித்தலொன்றை இன்று(08)விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று(08) பிற்பகல் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

தற்போது இடைநிலைப் பருவப் பெயர்ச்சிக் காலநிலை ஆரம்பமாகியுள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வளிமண்டலத்தில் ஏற்பட்ட குழப்பம் காரணமாகப் பெருமளவு மழை வீழ்ச்சி கிடைக்கப் பெற்றுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை தற்போதைய இடைநிலைப் பருவப் பெயர்ச்சிக் காலநிலை தொடரும். அதன் பின்னர் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காலநிலை ஆரம்பமாகும். இந்தக் காலப் பகுதியிலும் மழை வீழ்ச்சி கிடைக்கக் கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன என்றார்.

Related posts: