மரணதண்டனை விவகாரம் – கத்தோலிக்க சட்டத்தரணிகள் கடிதம்!

மரணதண்டனையை அமுல்படுத்துவதற்கான அரச ஆணையை இல்லாமல் செய்து அதற்கு பதிலாக கடுமையான குற்றங்களை குறைக்கக்கூடிய நீண்டகால கொள்கை வகுப்புக்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என யாழ்.மறை மாவட்ட கத்தோலிக்க சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றையும் அனுப்பியுள்ளனர்.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய பெயர் குறிப்பிடப்படாத நால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஆணையில் ஜனாதிபதி கையொப்பமிட்டதுடன் அதனை விரைவாக நிறைவேற்றப்போவதாக அறிவித்துள்ளார்.
இதனையடுத்து யாழ்.மறைமாவட்ட கத்தோலிக்க சட்டத்தரணிகள் சங்கம் தமது அக்கறையையும், அது தொடர்பான நிலைப்பாட்டையும் விளக்கி சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி மரியதாஸ் யூட் டினேஷ் மற்றும் செயலாளர் சட்டத்தரணி ஸ்ரனிஸ்லெஸ் செலஸ்ரீன் ஆகியோர் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு குறித்த கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனையினால் பாரிய சமூகப்பிரச்சனைகள் மற்றும் சமூகசீர்கேடுகள் உருவாகியிருக்கின்றன.
இளம் சமூதாயத்தினரிடம் போதைப்பொருள் ஈர்ப்பு மற்றும் பாவனையானது எதிர்கால சந்ததியினரின் இருப்புக்கு பாரிய சவாலாக இருக்கின்றது.
இதனை ஏற்றுக்கொண்டாலும் மரணதண்டனையை அமுல்படுத்துவதால் போதைப் பொருள் பாவனையை ஒழித்துவிட முடியும் என்பதில் எமக்கு உடன்பாடில்லை.
மாறாக போதைப்பொருள் வியாபாரம் மற்றும் கடத்தல் செய்பவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி அவர்களுக்கு கடுமையான தண்டனைகளை அதாவது ஆயுள்தண்டனை வழங்குவதன் மூலமே இவற்றை குறைக்கலாம் என்ரும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் இவ் விடயத்தை வலுவூட்டும் விதமாக கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி பரிசுத்த பாப்பரசர் மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச சமாசத்தில் ஆற்றிய உரையின் கருத்துக்களும் அக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
|
|