மரணதண்டனையை 20 வருட சிறைத் தண்டனையாக குறைக்க நடவடிக்கை – சிறைச்சாலைகள் விவகார இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, December 8th, 2020

சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஏற்பட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கான தண்டனையை 20 வருட சிறைத்தண்டனையாக குறைக்கப்போவதாக சிறைச்சாலைகள் விவகார இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை தெரிவித்துள்ளார்.

எனவே 8000 கைதிகளையாவது விடுதலை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் 28 சிறைகளில் 28951 கைதிகள் உள்ளனர் என தெரிவித்துள்ள அமைச்சர் இதன்காரணமாக சிறைச்சாலைகளில் நெரிசல்நிலைமை காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமன்னிப்பு வழங்கக்கூடிய கைதிகளுக்கு மன்னிப்பினை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என தெரிவித்துள்ள அமைச்சர் குறிப்பாக கொரோனா வைரஸ் நிலைமையை கருத்தில்கொண்டு இதனை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

நீதியமைச்சு சமர்ப்பித்துள்ள அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதும்,கடந்த 20 வருடங்களாக வழங்கப்படாத நான்கு வருட பொதுமன்னிப்பு வழங்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் அனைவரினதும் தண்டனைகள் 20 வருடசிறைத்தண்டனையாக குறைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

20 வருடத்திற்கு மேல் சிறைத்தண்டனை அனுபவித்தவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிணைசெலுத்தமுடியாத நிலையில் சிறையில் உள்ளவர்களுக்கு பிணைத்தொகையை குறைப்பதற்கும் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: