மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுகின்றோம்- ஐநாவுக்கான அறிக்கையில் இலங்கை தெரிவிப்பு!

Monday, September 6th, 2021

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் இந்த வருடம் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுகின்றது என தெரிவிக்கும் 13 பக்க ஆவணத்தை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜிஎல்பீரிஸ் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் பிரதிநிதி ஹனா சிங்கரிடம் கையளித்துள்ளார்.

எதிர்வரும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை அமர்வை அடிப்படையாக வைத்து தீர்மானிக்கப்பட்ட இந்த ஆவணம் இலங்கை வழங்கிய முக்கிய வாக்குறுதிகள் சில நிறைவேற்றப்படுகின்றன அல்லது நிறைவேற்றப்படவுள்ளன என தெரிவித்துள்ளது.

இந்த ஆவணத்தின் பிரதிகளை கொழும்பை தளமாக கொண்ட இராஜதந்திரிகளிற்கும் வெளிவிவகார அமைச்சு அனுப்பிவைத்துள்ளது.

காணாமல்போனவர்கள் அலுவலகம் இழப்பீட்டுக்கான அலுவலகம் முழுமையான நிலைமாற்றுக்கால நீதி தந்திரோபாயத்தை உருவாக்குதல், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல் போன்றவை குறித்து வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

பெருந்தொற்று காணப்படுகின்ற போதிலும் இலங்கை உறுதிப்பாட்டுடன் உள்ளது. உள்நாட்டு நடைமுறைகள் மற்றும் பொறிமுறைகள் மூலம் மனித உரிமை விவகாரங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளது என அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு தீர்வுகள் தீர்ந்துவிடாமல் மற்றும் செயல்முறைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஆதாரங்களை சேகரிப்பதற்கான வெளிப் பொறிமுறைகளை ஏற்படுத்துவதை இலங்கை நிராகரிக்கின்றது எனவும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட் நாட்டின் சம்மதம் ஒத்துழைப்பு இல்லாமல் இவ்வாறான வெளிபொறிமுறைகள் மற்றும் நடைமுறைகள் அரசியல் மயப்படுத்தப்படுகின்றன என்பதையும் தெரிவிக்கப்பட்டுள்ள மனித உரிமை நோக்கங்களை அவற்றால் நிறைவேற்ற முடியாது என்பதையும் சர்வதேச சமூகம் நன்கு அறிந்துள்ளது எனவும் இலங்கை தனது ஆவணத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: