மட்டக்களப்பில் கொவிட் இறப்புக்கள் அதிகரிப்பு : சடலங்கள் தேக்கம் – மாவட்டத்திற்குள் மின் தகனசாலையை உடன் நிறுவுமாறு வைத்தியசாலை பணிப்பாளர் கோரிக்கை!

Monday, September 6th, 2021

மட்டக்களப்பு மாவட்டத்திற்கென மின் தகனசாலை ஒன்றினை நிறுவ வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்தி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையினால் அதன் பணிப்பாளர் திருமதி கலாரஞ்சனியின் ஒப்பத்துடன் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது –

தற்போது ஏற்பட்டுள்ள கோவிட் 19 தொற்று காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் பல மரணங்கள் சம்பவித்துள்ளது. இந்தவகையில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையிலிருந்து மட்டும் இதுவரை கோவிட்19 தொற்றினால் சம்பவித்த 202 மரணங்களில் 27 சடலங்கள் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்யப்பட்டுள்ளது.

இச்சடலங்களை தகனம் செய்வதற்காக மட்டக்களப்பிலிருந்து 100 கி.மீ தொலைவில் பொலன்னறுவை மாவட்டத்தில் அமைந்துள்ள மின் தகனச்சாலைக்கு தகனம் செய்வதற்காக கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் பொலன்னறுவை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் அப்பிரிவிற்குட்பட்ட பொதுச் சுகாதார பரிசோதகர் ஆகியோரின் முன் அனுமதி பெறப்பட வேண்டியுள்ளதுடன் மின் தகனத்தினை மேற்கொள்ளவற்காக திம்புலாகலை பிரதே சபையிடமிருந்தும் அனுமதியைப் பெற்று அதன் பின்னரே குறித்த உடலத்தினை தகனம் செய்வதற்கு அனுப்ப வேண்டிய நிலை உள்ளது.

மேலும், தகனம் செய்வதற்காக சடலம் ஒன்றினை அனுப்புவதற்கு சடலத்தினை ஏற்றிச் செல்வதற்கென ஒரு வாகனம், அச்சடலத்தினை இறக்கி உரிய தகனச்சாலைக்கு கொண்டு சென்று கொடுப்பதற்கான வைத்தியசாலை ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக பிறிதொரு வாகனம். அத்துடன் இரு சாரதிகள் மற்றும் 06 உதவியாளர்கள் என ஆளணியினரும் ஒழுங்கு செய்யப்பட வேண்டியுள்ளது. ஆனால் தற்போது காணப்படும் இந் நோய் நிலமை காரணமாக வைத்தியசாலை ஊழியர்களின் வரவில் பெரும் பாதிபபு ஏற்பட்டுள்ளதால் உரிய நேரத்திற்கு குறித்த உடல்களை தகனம் செய்வதற்காக அனுப்பி வைப்பதில் கால தாமதம் ஏற்படுவதுடன் வைத்தியசாலையின் பிரேத அறையிலும் இடப்பற்றாக்குறை ஏற்படுகின்றது.

எனவே மேற்படி நிலமையினை கருத்தில் கொண்டு எமது மாவட்டத்தில் இறந்த உடல்களை தகனம் செய்வதற்கு மின் தகனச்சாலை ஒன்றை நிறுவுவதற்கு பொறுப்புவாய்ந்த அனைவரும் ஒருமித்து தீர்க்கமான முடிவினை எடுத்து மட்டக்களப்பு மாநகர சபை உடனடியாக தகனசாலை ஒன்றினை நிறுவ வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து மிக விரைவாக செயற்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: