போதைப்பொருள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க விசேட நீதிமன்றம் – ஜனாதிபதி!

Saturday, March 2nd, 2019

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய வழக்குகளை விசாரணைக்கு உட்படுத்துவதற்காக விசேட நீதிமன்றம் ஒன்றை அமைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிப்பதற்கு உத்தேசித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருட்களை கட்டுப்படுத்துதல், குற்றங்களை குறைத்தல் தொடர்பான சட்ட வரைபுகள் தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருளுடன் தொடர்புடைய வழக்குகளை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு நீண்ட காலம் எடுக்கின்றமையானது, போதைப்பொருளைக் கட்டுப்படுத்த முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பாரிய தடையாக உள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

இந்த நிலையில், குறித்த நிலைமையை சீர்செய்வதற்காக, தற்போதுள்ள உயர் நீதிமன்ற கட்டிடத் தொகுதியிலேயே புதிய நீதிமன்றத்தையும் நிறுவுவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேநேரம், பாடசாலை மாணவர்கள் பாபுல் போன்ற போதைப்பொருட்களுக்கு அடிமையாகின்ற நிலைமை அதிகரித்து வருவது குறித்தும், இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

சட்ட ஏற்பாடுகள் இல்லாமை இதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதில் தடையாக உள்ளதாக பாடசாலை அதிபர்களும், காவல்துறை அதிகாரிகளும் தன்னிடம் தெரிவிப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இதற்கான சட்ட திருத்தங்களை மேற்கொள்வது குறித்தும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

Related posts: