பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் அரசியல் சீர்திருத்தங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம் – ஐரோப்பிய ஒன்றிய தூதுவருக்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பீரிஸ் எடுத்துரைப்பு!

Saturday, July 9th, 2022

நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் தேவையான அரசியல் சீர்திருத்தங்களை வழங்குவதில் கவனம் செலுத்துவதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஐரோப்பிய ஒன்றிய தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டெனிஸ் சாய்பி ஆகியோருக்கிடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலின் போது, ஏனைய விடயங்களுக்கிடையில், தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பான அபிவிருத்திகள், 2012 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் ஒழுங்குமுறை இல 1 இன் கீழ் தடைசெய்யப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் பட்டியலை மீளாய்வு செய்தல், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் விடுதலை, சுயாதீன நிறுவனங்களால் ஏற்பட்ட முன்னேற்றம் மற்றும் அரசியலமைப்பின் உத்தேச 21 ஆவது திருத்தத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து அமைச்சர் பீரிஸ் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவருக்கு விளக்கமளித்தார்.

நிறுவப்பட்ட உள்நாட்டுப் பொறிமுறைகளின் மூலம் அரசாங்கம் சரிபார்க்கக்கூடிய மற்றும் அளவிடக்கூடிய பெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்றும், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் தேவையான அரசியல் சீர்திருத்தங்களை வழங்குவதில் கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

சமூகத்தின் நலிவடைந்த பிரிவினரை இலக்காகக் கொண்ட பல்வேறு நலன்புரி நடவடிக்கைகளை உள்ளடக்கிய புதிய வரவு செலவுத் திட்டத்தை விரைவில் சமர்ப்பிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து தெரிவிக்கப்பட்ட விவரங்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் பாராட்டினார். 2024 – 2033 ஆம் ஆண்டிற்கான அடுத்த ஐரோப்பிய ஒன்றிய ஜி.எஸ்.பி. ஒழுங்குமுறை தற்போது ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவிலும் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்திலும் கலந்துரையாடப்பட்டு வருவதாக தூதுவர் தெரிவித்தார்.

அண்மையில் முடிவடைந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 50 ஆவது கூட்டத் தொடர் உட்பட மனித உரிமைகள் பேரவை உறுப்பினர்களுடன் இலங்கை தனது ஆக்கபூர்வமான ஈடுபாட்டைத் தொடர்வதாக அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: