பொருத்தமற்ற ஆளணியை வைத்துக்கொண்டு வட மாகாணத்தின் கல்வி நிலையை உயர்த்துவதென்பது முடியாத காரியம் – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்!

Thursday, November 30th, 2017

பொருத்தமற்ற ஆளணியை வைத்துக்கொண்டு வடக்கு மாகாணத்தின் கல்வி நிலையை உயர்த்துவதென்பதும், ஆசிரிய பரம்பலைச் சீராக்கம் செய்வதென்பதும் எவராலும் முடியாத காரியம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் புவனேஸ்வரன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிட்டதாவது;

வடக்கு மாகாணத்தில் உள்ள 1093 பாடசாலைகளில் 1065 பாடசாலைகள் இயங்குகின்றன. இங்குள்ள 12 வலயங்களிலும் 22 தேசிய பாடசாலைகளும், 06 தனியார் பாடசாலைகளும் உள்ளன. இவற்றுள் 1ஏபி தர பாடசாலைகள் – 105, 1சீ பாடசாலைகள் ௲ 123, வகை 2 பாடசாலைகள் -315, வகை 3 பாடசாலைகள் – 460ம் உள்ளன.

மாகாணப் பாடசாலைகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 12 ஆயிரத்து 261. ஆசிரியர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 123. இவர்களுள் பெண் ஆசிரியர்கள் 10 ஆயிரத்து 998 பேர். ஆண் ஆசிரியர்கள் 4 ஆயிரத்து 8 பேர்.

சராசரியாக 14 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் வடக்கு மாகாணத்தில் உள்ளனர். ஆனால் இந்த ஆசிரியர்களின் பொருத்தப்பாடு இன்மையால் பாட ரீதியாக இரண்டாயிரத்திற்கும் அதிகமான ஆசிரிய வெற்றிடங்கள் உள்ளன.

உதாரணமாக, முன்னைய கால்களில் அழகியல் துறை சார்ந்த ஆசிரியர்கள்  1சீ பாடசாலைகளில் இரண்டு பாடசாலைகளுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் கடமை புரிந்தனர். தற்போது ஒரு பாடசாலையில் இரண்டுக்கு மேற்பட்ட ஆசிரியர்களும் கடமையில் உள்ளனர்.

இதைவிட திணைக்களக் கடமையில் 500ற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களோடு கடமை நிறைவேற்றும் பணியில் 1000 ற்கும் அதிகமானவர்கள் உள்ளனர். இத்தகைய குழப்பமான தரவுகளோடு வடக்கு மாகாணத்தின் கல்வியை மேம்படுத்துவது எப்படி?

இதற்கான மாற்று வழிகள் பலவற்றை பலநாட்டுக் கல்வி முறைகளுடன் ஒப்பீடு செய்து, இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் முன்வைத்தது. அதனை எவரும் கருத்தில் கொள்ளவும் இல்லை. நடைமுறைப்படுத்த எண்ணவும் இல்லை. இதை விட மத்திய அரசின் ஆசிரிய நியமனங்கள் பல எமது மாகாணத்துக்குப் பொருத்தமில்லாததாக இருக்கின்றன. உதாரணமாக வடக்கு மாகாணத்தில் பற்றாக்குறையாக உள்ள கணிதம், விஞ்ஞானம், ஆரம்பக் கல்வி, ஆங்கிலம், தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் ஆகிய பாடங்களுக்கு இன்னும் பற்றாக்குறை உள்ளது.

தற்போது வடக்கு மாகாணத்தில் ஆசிரிய ஆளணியைச் சீராக்கம் செய்வதற்காக புதிய ஆசிரிய இடமாற்றக் கொள்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை வடக்கு மாகாண சபையும் ஏற்றுள்ளது.

அதற்கு முன்னதாக ஆசிரிய ஆளணியின் உண்மைத்தன்மை வலயங்களில் பின்பற்றப்படுகின்றதா? பேணப்படுகின்றதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

சில ஆசிரியர்களின் நியமனவகை வேறு. கற்பிக்கும் பாடம் வேறு. அதிபர்களிடம் தகவல்கள் பெறப்படுகின்ற போது, ஆசிரியர்களால் வழங்கப்படும் தகவல்களையே தரவுகளாக வலயங்கள் வெளிப்படுத்துகின்றன. இதில் எவ்வளவு பாரதூரமான தவறு இருப்பதென்பதை எவரும் உணர்வதில்லை. மாறாக எழுந்தமானமாகப் பொதுவாக ஆசிரியர்கள் என்ற பதத்தை மட்டும் பயன்படுத்தி வலயங்களுக்கு இடையேயான இடமாற்றங்கள் நிகழ்கின்றன. இதனால் சில பாடத்துறை சார்ந்த ஆசிரியர்கள் ஓரிரு இடங்களில் செறிந்துவிடுகின்ற நிலைமை உருவாகின்றது. இதற்கு என்னதான் வழி? என்றுள்ளது.

Related posts: