பொதுமக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் வேலைத்திட்டம்- விசேட வர்த்தமானி நாளை வெளியீடு!

Saturday, May 9th, 2020

பொதுமக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் வேலைத்திட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் ஒழுங்கு விதிகள் என்பனவற்றை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தலை நாளையதினம் வெளியிடமுடியும் என எதிர்பார்ப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் குறித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக தாம் உள்ளிட்ட பணிக்குழாமினர் தயார்ப்படுத்தல்களை மேற்கொண்டு வருவதாக அரச அச்சுத் திணைக்கள அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

பொதுப்போக்குவரத்து சேவை, உணவு விநியோகம், கல்வி மற்றும் சேவை நிறுவனங்கள் என்பனவற்றுடன் பொது இடங்கள் மற்றும் சந்தை நடவடிக்கைகளில் மேற்கொள்ளப்படவேண்டிய முறைமைகள் குறித்து ஒழுங்குவிதிகள் அந்த வர்த்தமானியில் அறிவிக்கப்படவுள்ளது.

கொவிட்-19 தொற்று கட்டுப்பாடு தொடர்பில் எதிர்காலத்தில் செயற்படுவதற்கான சட்ட முறைமை குறித்த அதிகாரம் அமுலாக்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே, அரச மற்றம் தனியார் துறையினர், சிறு மற்றும் பாரிய வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள், பொதுக்கள் ஆகியோர் இதுவரைக் காலமும் கற்றறிந்த விடயங்கள் அடிப்படையில் செயற்பட்ட முறைமைக்கு அமைவாக செயற்படுவார்கள் என்பதே இதன்மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்பாக கட்டுப்பாடுகள் அவசியமாயின், அவற்றை மேற்கொள்வதற்கும் தாம் பின்னிற்பதில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

நாடுமுழுவதும், தற்சமயம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை மறுதினம் அதிகாலை 5 மணிமுதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளது.

தற்போது திட்டமிடப்பட்டுள்ளமைக்கு அமைய, நாளை மறுதிகம் நாட்டில் இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவருவதற்கான அனைத்து பணிகள் தற்போது தயார்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார பாதுகாப்பு முறைமைகளுக்கு அமைய, சேவைகள் உட்பட ஏனைய நாளாந்த பணிகள், கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளன.

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டதற்கு அமைய, பொது போக்குவரத்து சேவைகள், திட்டமிட்டவாறு ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதற்கு சமாந்தரமாக உணவகங்கள், சிற்றுண்டி சாலைகள் உள்ளிட்ட ஏனைய சேவைகளையும், மீள ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளபோதிலும், பணியில் ஈடுபட்டவர்களை வெளி மாவட்டங்களில் இருந்து மீள அழைப்பதில் சிக்கல் நிலை உள்ளதாக அவற்றின் உரிமையாளர்கள் சிலர் எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தனர்.

இதேவேளை, நாளைமறுதினம் முதல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவரும்போது, மதுபான விற்பனை நிலையங்களை திறக்காதிருப்பதற்கு அராசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட காலத்தில், மதுபான விற்பனை நிலையங்களில் முன்னால், பெருமளவானோர் கூடியிருந்தமை அவதானிக்கப்பட்டதன் காரணமாக, மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறிருப்பினும், மதுபான விற்பனை நிலையங்களை திறப்பது தொடர்பான யோசனை அரசாங்கததிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக, மதுவரித் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் 15 ஆம் திகதியின் பின்னர், மதுபான விற்பனை நிலையங்களை மீள திறப்பதற்கான இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:


அடையாள அட்டை இல்லாதவர்களுக்கான தற்காலிக அடையாள அட்டை - தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல் ஆணையா...
கல்விப் பொதுத் தராதரத்தில் சித்தியடைந்த மாணவர்களை உயர்தர வகுப்புகளுக்கு உள்வாங்குவதற்கான கடிதங்களை க...
தபால் ஊழியர்களின் பற்றாக்குறை - நாட்டின் சில பகுதிகளில் தபால் விநியோகம் தாமதமடைந்துள்ளதாக தபால் மா...