பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரின் குற்றச்சாட்டை விசாரிக்குமாறு அமைச்சர் கஞ்சன கோப் குழுத் தலைவர் சரித்த ஹேரத்திடம் கோரிக்கை!

Friday, July 8th, 2022

எரிபொருள் விலை மற்றும் கொள்முதல் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து, விசாரிக்குமாறு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான கோப் குழுத் தலைவர் சரித்த ஹேரத்திடம் கோரியுள்ளார்.

நேற்றுமுன்தினம் கோப் குழுவில் முன்னிலையான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க, பெற்றோல் மற்றும் டீசலை ஏறத்தாழ 250 ரூபாவை விட குறைவான விலையில் நாட்டில் விற்பனை செய்ய முடியும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், ட்விட்டர் பதிவொன்றில் குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ள அமைச்சர் கஞ்சன விஜேசேகர, இதற்காக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தையும், தம்மையும் கோப் குழுவிற்கு அழைக்குமாறும் கோரியுள்ளார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரோ அல்லது பெற்றோலிய கூட்டுத்தாபனமோ, கோப் குழுவையும், பொதுமக்களையும் தவறாக வழிநடத்தியிருந்தால், அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: