பெப்ரவரி மாதம் 15 முதல் மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும்!

Thursday, January 21st, 2021

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதிமுதல் மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சில் இடம் பெற்ற விஷேட கலந்துரையாடலின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்திலுள்ள 907 பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது பெற்றோரின் பொறுப்பு என்றும் இதை இலகுவாக எடுத்துக்கொள்வது பொறுப்பல்ல என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹோமாகமவில் மஹிந்த ராஜபக்ஷ கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது – தொற்று நோயை எதிர்கொள்வதற்காக பிள்ளைகளின் கல்வியை தாமதப்படுத்த முடியாது என அவர் தெரிவித்தார்.

அண்மைக்காலமாக பாடசாலைகளில் மாணவர் வரவு குறைந்து வரும் நிலையிலேயே பிரதமர் இந்தக் கருத்துகளை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts: