புதிய அரசியலமைப்புச் சீர்திருத்த தரவுகளை அரசியலமைப்புச் சபை செயற்பாட்டுக் குழுவிடம் ஒப்படைக்க நடவடிக்கை!

Saturday, May 14th, 2016

புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக மக்களிடமிருந்து திரட்டப்பட்ட அனைத்து தரவுகளையும் அரசியலமைப்புச் சபையின் செயற்பாட்டுக் குழுவிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்..

அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பிலான மக்களின் கருத்துகளை கேட்டறியும் குழுவினால் பல்வேறு மட்டங்களில் இருந்து திரட்டப்பட்ட மிக முக்கியமான தரவுகளும் இதில் அடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட அமர்வுகளில் மக்களிடமிருந்தும், அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் மற்றும் ஏனைய தரப்புகளிடமிருந்தும் மிக முக்கிய யோசனைகள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பில் வாய்மூலமாகவும், மின்னஞ்சல் மற்றும் எழுத்துமூலமாகவும் சுமார் 5000 யோசனைகள் திரட்டப்பட்டிருந்தன.

அரசியலமைப்பு தொடர்பான விசேட நிபுணர்களினாலும், சட்டத்தரணிகளாலும் குழுவிற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டதாக மக்களின் கருத்துகளை கேட்டறியும் குழுவின் தலைவர் கூறினார்.

குழுவிற்கு கிடைக்கப்பெற்ற யோசனைகள் அனைத்தையும் தரவுகளாக மாற்றி, இறுதி யோசனைகளை அரசியலமைப்பு சபையிடம் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: