புதிய அரசியலமைப்பின் மூலம் 13 ஆவது திருத்தத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது : 2021 இல் தேர்தல் நடைபெறும் – பொதுஜன பெரமுன தெரிவிப்பு!

Wednesday, September 30th, 2020

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு  எவ்வித பாதிப்பும் வராது.   மாகாண சபைகளில் காணப்படுகின்ற குறைகள் திருத்தம் செய்யப்பட்டு அடுத்த வருடத்தின்  முதல் காலாண்டில் மாகாண சபை தேர்தலை பழைய தேர்தல் முறைமையில்  நடத்துவதற்கான   சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக பொதுஜன பெரமுவின் மாகாணசபை உறுப்பினர் ஒன்றியத்தின் தலைவர் காஞ்சன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகள் தேர்தல், அரசியமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் கடந்தவாரம்  பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ,மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சர், இராஜாங்க அமைச்சர் ஆகியோருடன் இடம் பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

அரசியல் தேவைகளையும், ஒரு சில மாகாண சபைகளில் காணப்படுகின்ற குறைப்பாடுகளையும் கொண்டு மாகாண சபை  முறைமையை  இரத்து செய்ய முடியாது.

இந்திய பிரதமருக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கடந்தவாரம் இணையவழி  கலந்துரையாடலில்   பங்குப்பற்றினார்கள்.  இதன்போது  அரசியமைப்பின் 13 ஆவது திருத்தம், மாகாண சபை முறைமை தொரபில்  அதிக  அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

ஒரு சில மாகாண  சபைகளில் குறைப்பாடுகள் காணப்படுகின்றன.  கடந்த காலங்களில் வடக்கு மாகாண அபிவிருத்திக்காக மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிதி மீள மத்திய அரசாங்கத்திடமே  கையளிக்கப்பட்டுள்ளது. 

ஒரு சில மாகாண சபைகள் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டது. இவ்விடயத்தில்  தொடர்புடைய  தரப்பினர்  பொறுப்பு கூற வேண்டும் என தெரிவித்த அவர் மாகாண சபை தேர்தல் உரிய காலத்தில் இடம்பெற்றிருந்தால்  மாகாண சபை  முறைமை , அரசியமைப்பின் 13 ஆவது திருத்தம் ஆகியவை தொடர்பில் தேவையற்ற விமர்சனங்கள் எழுந்திருக்காது. கடந்த அரசாங்கம் பொறுப்பற்ற விதமாக செயற்பட்டமையின் காரணத்தினால்  மக்கள் அந்த அரசாங்கத்தை புறக்கணித்து  பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை   பலமாக ஸ்தாபித்துள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கும், மாகாண சபை முறைமைக்கும் எவ்வித பாதிப்பும்  ஏற்படாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: