புகையிரத கடவை காப்பாளர் ஒன்றியத்தின் கோரிக்கை!
Thursday, April 13th, 2017
புகையிரத கடவை காப்பாளர் குறித்து அரசு வைத்துள்ள திட்டத்தை தெரிவிக்க வேண்டும் என வடக்கு கிழக்கு புகையிரதக் கடவை காப்பாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.ஜே.றொகான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
புகையிரத கடவை காப்பாளர் சங்கத்தினர் நேற்று முன்தினம் தொடக்கம் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ள நிலையில், இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
அகில இலங்கை ரீதியில் 3628 ஊழியர்கள் புகையிரதக் கடவை ஊழியர்களாக கடமையாற்றி வருகின்றார்கள். ஆகவே எதிர்காலத்தில் இவர்கள் அரச ஊழியர்களாக உள்வாங்கப்படுவார்களா? இல்லையா? என்பதை இந்த அரசு தெளிவாக திட்டவட்டமாக கூற வேண்டும்.
அத்துடன் எங்கள் எதிர்காலம் சுபீட்சமான சக வாழ்வு சமாதானமான ஒரு சூழலை ஏற்படுத்த இந்த புதுவருட காலத்தில் அரசு எங்களுக்கான ஒரு தீர்வை பெற்றுத்தர வேண்டும்.எதிர்வரும் நாட்கள் பண்டிகைக் காலமாக இருப்பதால் புகையிரத கடவையை கடக்கும் மக்கள் அவதானமாக இருங்கள்.
மூன்று வருடங்களும் 9 மாதங்களும் கடந்துவிட்ட நிலையில் எந்தவிதமான தீர்வும் எட்டப்படாத நிலையிலேயே நாங்கள் எமது தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம்.நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் புகையிரத திணைக்கள ஊழியர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் உள்ள வெற்றிடங்களுக்கு எங்களுடைய ஊழியர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்பது எமது கோரிக்கையாக இருக்கிறது.
அத்துடன் அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கக் கூடிய பண்டிகைக்கால கொடுப்பனவு எங்களுக்கும் வழங்கப்பட வேண்டும், எதிர்காலத்தில் எங்களுடைய பிள்ளைகளுக்கு இது ஒரு பண்டிகை என்பதை அவர்களுக்கு நினைவு கூறும் விதத்தில் நாங்கள் கொண்டாட வேண்டும்.காரணம் நாங்கள் எங்கள் குடும்பத்துடன் எந்தவிதமான பண்டிகைகளையும் கொண்டாடுவதில்லை காரணம் 7500 ரூபா சம்பளத்தில் எங்கள் குடும்பத்தைக் கூட கொண்டு நடத்த முடிவதில்லை. ஆகவே பண்டிகைக்காலத்தில் எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.
Related posts:
|
|
|


