பிரதமர் ரணில் தலைமையிலான புதிய அரசில் நான்கு புதிய அமைச்சர்கள் இன்றையதினம் நியமனம் !

Saturday, May 14th, 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் 4 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக  ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும், தினேஷ் குணவர்தன பொது நிர்வாகம், உள்நாட்டு விவகாரங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சராகவும், பிரசன்ன ரணதுங்க நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சராகவும், எரிசக்தி அமைச்சராக கஞ்சன விஜேசேகரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே

ஐக்கிய மக்கள் சக்தியை புதிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கும், எதிர்கால சந்ததியினரின் சுபீட்சமான எதிர்காலத்திற்காகவும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை பிரதமர் குறித்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, கட்சி பேதமின்றி தாய்நாட்டிற்காக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டுமெனவும், அதற்காக ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுப்பதாகவும் சஜித்துக்கு அனுப்பிய கடிதத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்

கபீர் ஹாசிம், ஹெக்டர் அப்புஹாமி உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாளைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த 10 முதல் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த வாரத்தில் கட்சியில் இருந்து விலக இருந்ததுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலையிட்டு அதனை தடுத்து நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் நாளையதினம் ஐக்கிய மக்கள் சக்தியின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகி, அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கி வரும் சுனில் பிரேமஜயந்த, நிமல் சிறிபால டி சில்வா மற்றும் நிமல் லங்சா ஆகியேர் இன்று மதியம் பிரதமரின் செயலகத்திற்கு சென்று பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது.

00

Related posts: