பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் பாரிய அளவில் அபிவிருத்தி –இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவிப்பு!

Tuesday, January 18th, 2022

கடந்த அரசாங்க காலத்தில் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு பாரபட்சம் காட்டப்பட்டு ஒதுக்கப்பட்டது இதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த அரசாங்க காலத்தின்போது வட கிழக்கு மாகாணங்களில் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள கிராமங்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி தொடர்பில் புறக்கணிக்கப்பட்டு வந்தது.

குறிப்பாகத் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு வீதி, பாலம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் புறக்கணிக்கப்பட்டது. ஆனால் அந்த நிலை தற்போது இல்லை.

ஜனாதிபதியின் சுபிட்சத்தின் நோக்கு திட்டத்தீனூடாக நாட்டை கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்தின் கீழ் எமது நாட்டின் ஒன்பது மாகாணங்களுக்கும் சரிசமமாக நிதி பகிர்ந்தளிக்கப்பட்டு பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் பாரிய அளவில் அபிவிருத்தி செய்யப்படுகின்றது

இதில் கிராமங்களின் உள்ளக வீதிகள், பிரதான வீதிகள், பாலங்கள் ,நீர்த்தேக்கங்கள், நீர் வழங்கும் வடிகால் திட்டங்கள் , கிராமங்களை சார்ந்த நகர கடைத் தொகுதிகள் அபிவிருத்தி என்பன பாரிய அளவில் அனைத்து சமூகத்தினரும் பயன்பெறும் வகையில் அபிவிருத்தி செய்யப்படுகின்றது

இவ்வனைத்து வேலைத்திட்டங்களும் கிராமங்களை அபிவிருத்தி செய்வதையே இலக்காக கொண்டு முன்னெடுக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேச சார்ந்த கிராமங்களில் விவசாயம், நன்னீர் மீன்பிடி ,மேட்டு நில பயிற்செய்கை, கால்நடைகள் வளர்ப்பு உற்பத்தி பொருளாதார மையமாக இந்த படுவான்கரைப் பிரதேசம் காணப்படுகின்றது

இந்த உற்பத்திதுறையை மேலும் பலப்படுத்துவதற்கு பிரதேசங்களுக்கான வீதிகள் அபிவிருத்தி செய்வது மிக முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது. பாலங்கள், நீர் தேக்கங்கள் என்பன அபிவிருத்தி மற்றும் நீர்த்தேக்கங்களின் ஒருங்கிணைப்பு என்பன அவசியமான ஒன்றாகும்.

இவ்வாறு அபிவிருத்தி செய்யும்போது கிராமங்கள் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெறும் கிராமங்களை அபிவிருத்தி செய்வதையே இலக்காக கொண்டு பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது எனவும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: