பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

Monday, April 17th, 2017

மீதொட்டுமுல்ல குப்பை மேடு சரிந்து வீழ்ந்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை உடன் வழங்குமாறு  ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

மீதொட்டுமுல்ல குப்பை மேடு சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பான விசேட கூட்டமொன்று இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் இடம்பெற்றது.  இதன் போதே  ஜனாதிபதி இந்த உத்தரவை உரிய அதிகாரிகளுக்கு விடுத்தார்.

அனர்த்தம் ஏற்பட்டுள்ள பிரதேசத்திலிருந்து குப்பை மேடைகளை அகற்றுவது குறித்து கூட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. குப்பை மேடு சரிந்து வீழ்ந்ததில்  சிக்கியுள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்தும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

நெல் சந்தைப்படுதல் சபைக்கு சொந்தமான மூன்று களஞ்சியசாலைகள் பாதிக்கப்பட்ட மக்களை தற்காலிகமாக தங்க வைப்பதற்கு பயன்படுத்தப்படவுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களின் சொத்துக்களை பாதுகாப்பதற்கு விசேட பாதுகாப்பு திட்டம் ஒன்று அந்தப் பகுதியில் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தில் ஏற்பட்ட மொத்த பாதிப்பு தொடர்பான அறிக்கை ஒன்றை அடுத்த வரும் ஐந்து தினங்களுக்குள் தமக்கு சமர்பிக்கும் படி ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

நிவாரண நடவடிக்கைகள் தொடர்பான முன்னேற்ற நடவடிக்கைள் குறித்து ஆராய்வதற்கு மூன்று தினங்களுக்கு ஒருமுறை விசேட கூட்டம் ஒன்றை நடத்துவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.  இக்கூட்டத்தின் தொடராக மற்றுமொரு கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை காலை 8.30க்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் இடம்பெறும் எனவும் இதன் போது அறிவிக்கப்பட்டது

Related posts: