பாடசாலைக்கான பேருந்து போக்குவரத்திற்கு வழிவகை செய்து தாருங்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கல்மடு நகர் ரங்கன் குடியிருப்பு மக்கள் கோரிக்கை!

Tuesday, March 5th, 2024

தமது பிள்ளைகளின் பாடசாலைக்கான பாதுகாப்பான பேருந்து போக்குவரத்திற்கு வழிவகை செய்துதருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கண்டாவளை கல்மடு நகர் ரங்கன் குடியிருப்பு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் மக்களின் சந்திப்பு  ஒன்று நேற்றையதினம் கிளிநொச்சி மாவட்ட ஒரங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் அமீனின் பிரசன்னத்துடன் (4) கண்டாவளை கல்மடு நகர் ரங்கன் குடியிருப்பு கிராமத்தில் நடைபெற்றுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கண்டாவளை பிரதேச அமைப்பாளர் தோழர் கமல் ஏற்பாடு செய்திருந்த இச் சந்திப்பில் கல்மடு நாவல் நகரிலிருந்து ரங்கன் குடியிருப்பு வரையான மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு மாணவர்கள் பாடசாலைக்காக சென்று வருவதில் எதிர்கொள்ளும் சிரமங்களை தவிர்ப்பதற்கான வழிவகைகள் மற்றும் இரவு வேளைகளில் பாதுகாப்பான பேருந்து தரிப்பிடத்துக்கான ஏற்பாடுகள் பயணிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் போக்குவரத்துக்கான நேர ஒழுங்குகளும் கவனம் செலுத்தப்பட்டன.

குறித்த சந்திப்பில் பேருந்து போக்குவரத்து வழித்தட நிலமைகளை நேரடியாக கவனம் செலுத்தவென கிளிநொச்சி இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சாலை  தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் சாரதிகள் அங்கு வருகை தந்திருந்தனர்.

கடும் வெயிலில் பாடசாலைக்காக பிள்ளைகள் செல்வதற்கு பாதுகாப்பற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருப்பதாக சந்திப்பில் கலந்து கொண்ட பெற்றோர்கள் கவலை தெரிவித்தனர்.

மேலும் வீதிகள் சீராக இல்லாமையால் நீண்ட தூரத்துக்கு சைக்கிள்களில் பிள்ளைகளை ஏற்றி இறக்குவதில் எதிர்கொள்ளும் சிரமங்களும் இச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன் பேருந்து போக்குவரத்து சாத்தியப்படும் பட்சத்தில் அது தமக்கு பேருதவியாக அமையுமென அவர்கள் வலியுறுத்தினர்.

இதேவளை இராமநாதபுரம் மற்றும் கல்மடு என இரு பாடசாலைகளுக்குமாக  சுமார் 100 க்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் தொழிலுக்காக வெளியூர் செல்பவர்கள் என பலரும் பெரும் சிரமத்தின் மத்தியிலேயே இக் கிராமத்தில் இருந்து செல்ல வேண்டி இருப்பதால் எவ்வழியிலேனும் பேருந்து போக்குவரத்துக்கு வகை செய்து உதவுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: