பலாலி புனித ஆரோக்கிய மாதா ஆயம் செல்ல அனுமதி!

Friday, August 26th, 2016

பலாலியில் மீள்குடியேற்றம் செய்யப்படாத பகுதியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா ஆயல வருடாந்த பெருநாளைக் கொண்டாட பலாலி பாதுகாப்பு படைத்தலைமையகம் அனுமதி வழங்கியுள்ளது.

பலாலி வடக்கு ஜே. 254 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 1500 குடும்பங்கள் புனித ஆரோக்கிய மாதா ஆலய வருடாந்த திருநாள் திருப்பலி ஆவணி மாதம் 29 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டு, புரட்டாதி மாதம் 08 ஆம் திகதி பெருநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, வெகு விமர்சையாக அப்பகுதி மக்களினால் கொண்டாடப்படுவது வழமை.

கடந்த 26 வருடங்களுக்கு மேலாக அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்து பல்வேறு பகுதிகளிலும் வசித்து வருகின்றார்கள்.யுத்தத்தின் பின்னர் பலாலி பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்படாமையினால், ஆலயத்திற்கு சென்று பூசை வழிபாடுகளை செய்வதற்கு இராணுவத்தினர் அனுமதி மறுத்த நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஒரு முறை அனுமதி அளித்ததன் பிரகாரம் அப்பகுதி மக்கள் ஆலயத்திற்கு சென்று பூசை வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் பின்னர் கடந்த 5 வருடங்கள் அப்பகுதிக்குச் செல்ல இராணுவத்தினர் அனுமதி மறுத்துள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில், கடந்த 6 நாட்களுக்கு முன்னர் அப்பகுதி மக்கள் யாழ். ஆயர் யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையிடம் ஆலயத்திற்கு சென்று பெருநாள் கொண்டாடுவதற்கு யாழ்.மாவட்ட பாதுகாப்புப் படைத் தலைமையகத்திடம் அனுமதி பெற்றுத் தருமாறு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க யாழ்.பாதுகாப்புப் படைத்தலைமையகம் பெருநாள் கொண்டாடுவதற்கான அனுமயினை வழங்கியுள்ளது.

அந்தவகையில் எதிர்வரும் புரட்டாதி மாதம் 08 ஆம் திகதி புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தின் வருடாந்த பெருநாளைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

புரட்டாதி 08 ஆம் திகதி காலை 8.00 மணிக்கு கொடியேற்றத்துடன், பெருநாள் திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது. வருடாந்த பெருநாள் உற்சவத்தில் அப்பகுதி மக்களை பங்கு பற்றி புனித ஆரோக்கிய மாதாவின் அருளைப் பெற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அப்பகுதியில் உள்ள புனித செபஸ்திரியார் ஆலயம் இராணுவத்தினரால் முற்றாக இடிக்கப்பட்டு ஆலயத்தில் உள்ள சொரூபங்கள் புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளதால், அன்றைய தினம் புனித செபஸ்திரியார் ஆலய பங்கு மக்களும் இத்திருப்பலி பூசையில் பங்கு பற்றிக்கொள்ளுமாறும் ஆலய நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related posts: