பர்தாவுடன் வருவோரை துன்புறுத்த வேண்டாம் – கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்!

Saturday, December 10th, 2016

முகத்தை மறைக்கும் வகையில் பர்தா அணிந்து பரீட்சை நிலையம் வரும் பரீட்சார்த்திகளை பெண் பரீட்சை அதிகாரிகளைக் கொண்டு சோதனையிடுமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரிகள் பரீட்சை விதிகளின்படி செயற்பட வேண்டுமெனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

அதேபோன்று பர்தாவுடன் வரும் முஸ்லிம் மாணவிகளும் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த பரீட்சை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றச் சென்ற மாணவர்கள் பர்தா அணிந்திருந்தமையால் பரீட்சை நிலையத்திற்குள் செல்ல முடியாமல்போன சம்பவம் குறித்து அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

இது குறித்து அமைச்சர், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியு. எம்.என்.ஜே. புஸ்பகுமாரவிடம் விசாரணை நடத்தியதுடன் எக்காரணம் கொண்டும் பரீட்சை அதிகாரிகள் பரீட்சை விதிகளை மீறக்கூடாது என்றும் அமைச்சர் பரீட்சை அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

அந்த வகையில் எந்நிலையிலும் பர்தா அணிந்து வரும் முஸ்லிம் மாணவிகள் செளகரியக் குறைவிற்கு உட்படுத்தப்படக்கூடாது என்றும் அவர்களது அடையாள அட்டை உள்ளிட்ட ஏனைய ஆவணங்களை பெண் உத்தியோகத்தர்களைக்கொண்டு சோதனையிட வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

இவ்வாறான சம்பவங்களால் இனவாதம் மற்றும் மதவாதம் முன்னிலைப் படுத்தப்படுவதையிட்டு அமைச்சர் தனது கவலையை தெரிவித்துள்ளார். அத்துடன் நாவலப்பிட்டி புனித மரியாள் பரீட்சை நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சி தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அமைச்சர் பரீட்சைகள் ஆணையாளருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளாரென்றும் கல்வி அமைச்சு ​தெரிவிக்கின்றது.

muslim-students-akila

Related posts: