பரீட்சைக்கான திகதிகளில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படமாட்டாது – பாடப் புத்தகங்களை வழங்க இந்திய உவியும் கிடைக்கப் பெற்றுள்ளது – அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவிப்பு!

கல்விப் பொதுத்தராதர உயர்தர மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள திகதிகளில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்பட மாட்டாதென கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீ்ட்சை எதிர்வரும் டிசம்பர் 18 ஆம் திகதியும் க.பொ.த உயர்தர பரீட்சை எதிர்வரும் ஜனவரி 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி 17 ஆம் திகதி வரையான காலத்தில் நடத்துவதற்கு கல்வியமைச்சு திட்டமிட்டுள்ளது.
டிசம்பர் மாதத்தில் நடத்தப்படவிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திப்போடுமாறு அந்த பரீட்சைக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது தடவையாக தோற்றும் மாணவர்களினால் பெருமளவு வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.
அத்துடன் அதற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளும் கருத்துக்களை முன்வைத்தனர் என்றும் கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்ட பின்னர் மீண்டும் ஒரு முறை பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் அதற்காக தம்மை தயார்படுத்துவதற்கு மூன்று மாத காலங்களே இருந்தது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அனைத்துக் காரணங்களையும் கருத்திற்கொண்டு தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள திகதிகளில் பரீட்சைகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன் பரீட்சைகளை மீண்டும் ஒத்திப்போடுமாறு எந்தத் தரப்பிலிருந்தும் வேண்டுகோள் விடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே வருட இறுதியில் ஏற்படும் 32 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப கல்வி அமைச்சுத் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கமைவாக, 22 ஆயிரம் பட்டதாரிகள் ஆசிரிய சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துன் தற்போது பாடசாலைகளில் 22 ஆயிரம் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகின்றன. அமுலுக்கு வரும் புதிய ஓய்வூதியக் கொள்கை காரணமாக இந்த வருட இறுதியில் சுமார் 10 ஆயிரம் ஆசிரியர்கள் ஓய்வு பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரம்பத் திட்டமாக பட்டதாரி ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கான பரீட்சையை அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது அபிவிருத்தி உதவியாளர்களாக பணிபுரிபவர்களும், அரச சேவையில் உள்ள ஏனைய பட்டதாரிகளும் இதற்காக விண்ணப்பிக்கலாம். இதற்கு அரச சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்த வருடமுதல் பாடசாலை தவணை ஆரம்பிக்கும் போது திட்டமிட்டபடி பாடப் புத்தகங்களை வழங்க தேவையான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த அமைச்சர் . இதற்காக இந்திய கடனுதவி கிடைக்கப் பெற்றுள்ளது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|