பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரிக்கும் தெரிவுக்குழு விசாரணை இன்றும்!

Tuesday, June 11th, 2019

பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்றத்தெரிவுக்குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எச்சரிக்கைக்கு மத்தியில் இன்றும் கூடவுள்ளது.

இந்த தெரிவுக்குழு முன்பாக தேசிய பாதுகாப்பு இரகசியங்கள் வெளியிடப்படுவதாக குற்றம் சாட்டியிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தெரிவுக்குழுவுக்கு முன்பாக, பாதுகாப்பு அதிகாரிகளை முன்னிலையாக கூடாது என உத்தரவிட்டிருப்பதாக கூறியிருந்தார்.

அத்துடன், தெரிவுக்குழு விசாரணைகளை நிறுத்துமாறு சபாநாயகருக்கும் அவர் அறிவித்திருந்தார்.

அந்தக் கோரிக்கையை நிராகரித்திருந்த சபாநாயகர், தெரிவுக்குழுவை நாடாளுமன்றமே அமைத்தது என்றும் நாடாளுமன்றமே அதனை நிறுத்தவேண்டுமே தவிர, அதனை நிறுத்தும் அதிகாரம் தனக்கு கிடையாது என்றும் பதிலளித்திருந்தார்.

அதேவேளை கடந்தவாரம் அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தெரிவுக்குழுவின் விசாரணையை நிறுத்தவேண்டும் என்றும் இல்லையேல் அமைச்சரவைக் கூட்டம் உள்ளிட்டவற்றை தான் புறக்கணிப்பேன் எனவும் எச்சரித்திருந்தார்.

ஆனாலும், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணை இன்று நடைபெறும் என்று அதன்தலைவர் ஆனந்தகுமாரசிறி கூறியிருந்தார்.

இதனடிப்படையில் இன்றைய அமர்வில், முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அசாத்சாலி மற்றும், காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளனர்.

Related posts: