பத்துப் பேரே வீடுகளுக்கு சென்று வாக்குகள்  கேட்க முடியும்  – பொலீஸ் ஊடகப் பேச்சாளர்!

Friday, December 29th, 2017

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வீடு வீடாகச் சென்று பரப்புரை செய்வதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு செல்லும் குழுவில் 10பேருக்கு உட்பட்டவர்களே இருக்க முடியும் எனறு பொலீஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது

ஒட்டப்பட்ட தேர்தல் சுவரொட்டிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிராந்தியத்திலும் உள்ள பொலீஸ் தலமையகங்களுக்குத் தலா 3 தொழிலாளர்கள் வீதமும் ஏனைய பொலீஸ் நிலையங்களுக்கு தலா 2 தொழிலாளர்கள் வீதமும் இணைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.  அவர்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரத்து  68 ரூபா வேதனம் வழங்கப்பட்டுள்ளது.

சுவரெட்டிகள் ஒட்டுவோருக்கு எதிராகவும் அவற்றை வைத்திருப்போருக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எவரிடமிருந்தாவது சுவரொட்டிகள் கைப்பபற்றப்பட்டால் சுவரொட்டிகளுக்குரிய வேட்பாளரிடம்  விசாரனை நடாத்தப்படும். அதுதொடர்பான விசாரனை அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பப்படும். அந்த வேட்பாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய அல்லது நடவடிக்கை எடுக்க ஆலோசனை கிடைத்தால் அதுவும் முன்னெடுக்கப்படும்.

தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர்கள் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகின்றது. அது தொடர்பாகச் செயற்படும் அதிகாரங்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கே உண்டு.யாரேனும் வேட்பாளர்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு எம்மிடம்  அறிக்கை கோருமாயின், அது தொடர்பான தகவல்களை திரட்டி வழங்கத் தயாராக உள்ளோம் என்றார்.

Related posts: