பசுமை பொருளாதாரத்துக்குள் பிரவேசிக்கும் பிராந்தியத்தின் முதல் நாடாக இலங்கையை மாற்ற உத்தேசம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Tuesday, March 28th, 2023

பிராந்தியத்தில் பசுமைப் பொருளாதாரத்திற்குள் பிரவேசிக்கும் முதல் நாடாக இலங்கைக்கு இன்னும் இரண்டு மாதங்களில் அதன் கொள்கையை அறிமுகப்படுத்த முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேயிலை ஏற்றுமதியில் இலங்கை முதலிடத்திற்கு வந்ததைப் போன்று, பசுமைப் பொருளாதாரக் கொள்கையிலும் இலங்கையை முதலிடத்திற்கு கொண்டு வருவதே தமது எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பசுமை வலுசக்தி உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக நாட்டுக்கு வந்துள்ள முதலீட்டாளர்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் – இலங்கைக்கு இரண்டு முக்கிய பிரச்சினைகள் உள்ளன. அவற்றில் ஒன்று கடன் மறுசீரமைப்பு. மற்றொன்று, பசுமை வலுசக்தியை நோக்கி நாட்டை வழிநடத்துவது.

கடன் மறுசீரமைப்புப் பணி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நாட்டில் பசுமைப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அவசரமாகச் செயற்பட வேண்டும்.

பசுமைப் பொருளாதாரத்தை நோக்கிச் செல்வதற்கான அனைத்துத் தகுதிகளும் இலங்கைக்கு உள்ளது. சூரிய சக்தி, காற்றாலை, உயிர் வாயு, கடல் அலைகள் போன்றவற்றைப் பயன்படுத்தி வலுசக்தியை உற்பத்தி செய்யும் திறன் இலங்கைக்கு இருக்கிறது.

எனவே, பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான முக்கிய ஆற்றலாக பசுமைப் பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தலாம்.

அதனடிப்படையில் அடுத்த இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வலயத்தின் முதல் பசுமைப் பொருளாதாரக் கொள்கை இதுவாகும்.

இதன் ஊடாக முதலீட்டாளர்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கிடைப்பதோடு அவர்களுக்கு வசதிகளை வழங்குவதற்கு அரசாங்கமும் கடமைப்பட்டுள்ளது.

இது ஒரு நீண்ட கால திட்டமாக உள்ளதுடன் இதற்கான சட்டக் கட்டமைப்பைத் தயாரிப்பது அவசியமாகும். அதற்காக விரைவில் சட்டம் இயற்ற எதிர்பார்க்கப்படுகிறது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: