பகிடிவதையை ஒழிப்பதற்கு பொது வேலைத்திட்டம் பற்றி சிந்திக்க வேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்து!

Sunday, June 10th, 2018

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் மனிதாபிமானமற்ற பகிடிவதையை ஒழிப்பதற்கு பொறுப்பு வாய்ந்த அனைத்து தரப்பினரும் இணைந்து பொது வேலைத்திட்டம் குறித்து உடனடியாக சிந்திக்க வேண்டும் என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பண்டாரவளை மத்தியமகாவித்தியாலயத்தில் புதிய மூன்று மாடிக் கட்டடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

பண்பாடற்ற முறையில் இடம்பெறும் மனிதாபிமானமற்ற பகிடிவதை காரணமாக கடந்த சில வருடங்களாக நாட்டின் பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு விரும்பத்தகாத விடயங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது.

எதிர்காலத்தில் நாட்டை பொறுப்பேற்கவுள்ள மாணவர் தலைமுறைக்கு ஏற்பட்டுள்ள இந்தச் சவாலுக்கு உடனடியாக தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் அவர் வலியுறுத்தினார்.

இந்த நடவடிக்கைகளின் பின்னால் சில அதிகார மோகம் பிடித்த அரசியல் அமைப்புகள் செயற்படுவதாகவும் நாட்டின் எதிர்கால தலைமுறையினரின் எதிர்காலத்தை இருளில் தள்ளும் இந்த பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதற்கு அனைத்து தரப்பினரும் தமது பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டுமென்றும் தெரிவித்தார்.

கணனி மற்றும் கைத்தொழில் மூலம் ஏற்படும் குற்றங்கள் குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி இந்த விரும்பத்தகாத நிலைமைகள் குறித்து அரசாங்கம் விரிவாக கவனம் செலுத்தியிருப்பதாக தெரிவித்தார்.

பிள்ளைகளின் பரீட்சைப் பெறுபேறுகள் குறித்து மகிழ்ச்சியடைவதைப்போன்று சிறந்ததோர் சமூகத்தில் தொழில்நுட்பத்தைச் சரியாகப் பயன்படுத்தும் சமூகப் பொறுப்புக்கள் குறித்து தெளிவுடன் செயற்படும் பரீட்சை போன்று வாழ்க்கையிலும் சித்தி பெறும் எதிர்கால தலைமுறையை உருவாக்குவதற்கு தமது பொறுப்புக்களை அனைவரும் நிறைவேற்ற வேண்டுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Related posts: