நெருக்கடியிலிருந்து வெளிவருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் – மகிந்த ராஜபக்ச உறுதிபடத் தெரிவிப்பு!

Tuesday, April 12th, 2022

நீங்கள் வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் ஒவ்வொரு செகண்டும் நாங்கள் நாட்டிற்காக டொலர்களை உழைக்கின்ற வாய்ப்பை தவறவிடுகின்றோம் என சுட்டிக்காட்டியுள்ள பிரதமர்  மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகான முன்வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் யாரும் முன்வரவில்லை. எனவே, ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திற்கு அதிகாரம் உண்டு. தற்போதைய நெருக்கடியை தீர்க்க நாம் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்றையதினம் நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். இதன்பொதே அவர் அவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

எங்கள் நாடு மிகவும் இக்காட்டான சூழ்நிலையில் இருக்கும் இந்த தருணத்தில் உங்கள் மத்தியில் உரையாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 50 ஆண்டு காலத்துக்கும் மேலான எனது அரசியல் வாழக்கையில் மிகவும் தீர்மானம் மிக்க அரசியல் மைல்கற்களை நான் கடந்து வந்துள்ளேன்.

கொரோனா தொற்றுநோய்க்கு பின்னர் நாம் எதிர்கொள்ள வேண்டி நேரிட்ட பொருளாதார பிரச்சினைகளை நம் நாட்டு மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள் என நான் நம்புகிறேன். இத்தொற்றுநோய் தாக்கத்திலிருந்து நம் மக்களை எம்மால் பாதுகாக்க முடிந்தபோதும், தற்போது எங்கள் நாடு சவால்களுக்கு உட்பட்டு இருப்பதை எமக்கு உணர முடிகின்றது.

நாடு முடக்கப்பட்டதோடு அந்நியச் செலாவணி வீழ்ச்சியடைந்ததுடன், வெளிநாட்டு கையிருப்பு சிதைவடைந்தது என்பதை நான் கூறி தெரியவேண்டியதில்லை. கடலில் எண்ணெய் கப்பல்கள் கண்களுக்கு எட்டும் தூரத்தில் இருந்தபோதும் அவற்றை பெற்றுக்கொள்வதற்கான டொலர் எம்மிடம் இல்லாதததால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாவதற்கு நேரிட்டுள்ளது.

யுத்தத்தை வெற்றிகொண்டு 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பொதுமக்களால் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் மக்களுக்கு ஆற்றிய உரை, தற்போது எனது நினைவிற்கு வருகின்றது. அன்று மின்சார தடையில்லாத நாடொன்றை எதிர்காலத்தில் கட்டியெழுப்புவோம் என நான் கூறினேன். அதற்காக நாம் மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து நாம் செயலாற்றிய போதும், கடந்த அரசாங்கம் எமது வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்லாமையினால் அந்த எதிர்பார்புகளை எம்மால் பூர்த்தி செய்ய முடியாமல் போனது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பல நாட்களாக வரிசையில் நிற்கும் மக்களின் கஷ்டம் எமக்கு நன்கு புரிகின்றது. எரிவாயுவை பெற்றுக்கொள்ள வரிசையில் நின்ற பெண்களின் வேதனையை எம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது. பொருட்களின் விலை, விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில் மக்கள் அனுபவித்துவரும் துன்பம் குறித்து நம் அனைவருக்கும் நல்ல புரிதல் உள்ளது.

அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்புவோம் என நாம் சகல கட்சிகளுக்கும் அழைப்புவிடுத்தோம். ஆனால் வரவில்லை. இந்த தருணத்தில் கட்சி குறித்து சிந்திப்பதைவிட நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதே நம் அனைவரதும் பொறுப்பாகும்.

யார் பொறுப்பை ஏற்காவிடினும் ஆட்சியிலுள்ள கட்சி என்ற வகையில் நாம் அந்த இறுதி பொறுப்பை ஏற்க வேண்டும். நாம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத் தருவோம்.

30 ஆண்டுகால பயங்கரவாத அச்சுறுத்தலை இல்லாதொழித்து, இந்நாட்டு மக்களின் மனதில் இருந்த பயத்தை அகற்றியது, இதுபோன்ற துன்பத்தில் மக்களை தள்ளுவதற்காக அல்ல. மக்களாகிய உங்களை வரிசையில் நிறுத்துவதற்காக நாம் வீதிகளையும், அதிவேக நெடுஞ்சாலைகளையும் அமைக்கவில்லை. எண்ணெய் கப்பல்களை தடுத்து நிறுத்தி வைப்பதற்காக துறைமுகங்களை நாம் அமைக்கவில்லை.

ஏனைய நாடுகளில் கொரோனா தொற்று நோயால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த வேளையில், அனைத்து வசதிகளையும் கொண்ட கொரோனா தொற்றுநோய் தடுப்பு நிலையங்களை அமைத்து, கொத்தமல்லி நீரிலிருந்து உணவு, மருந்து ஆகியவற்றை வழங்கி முழு நாட்டிற்கும் தடுப்பூசியையும் பெற்றுக்கொடுத்து மக்களின் உயிரை பாதுகாத்தது, கண்ணீர் புகைக்கும், துப்பாக்கி தோட்டாக்களுக்கும் மக்களை பலி கொடுப்பதற்கல்ல. நம் நாட்டின் அனைத்து பிரச்சினைகளின் போதும் மக்களின் உயிர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுத்த அரசியல் வரலாற்றை நாம் கொண்டுள்ளோம்.

இந்த நெருக்கடியிலிருந்து வெளிவருவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்வோம்.

பொதுமக்களுடன் இணைந்து தைரியமாக பணியாற்றி, இலங்கையை கடனற்ற நாடாக மாற்றுவதற்காகவே வெளிநாடுகளிலிருந்து கடன்களை பெற்றுக்கொள்வதை இந்த அரசாங்கம் மட்டுப்படுத்தியது.

மிகவும் இக்காட்டான சூழ்நிலைகளிலும் வெளிநாடுகளிலிருந்து உதவிகளை பெற்றுக்கொள்ளும் போது, நாட்டின் சுயாதீனத்தை பாதுகாத்து உதவிகளை பெற்றுக்கொள்வதற்கே நாம் எப்போதும் முயற்சித்தோம்.

அதனால் தான், பாரிய அளவு வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இருந்த போதும் பொதுமக்களின் ஆணைக்கு மதிப்பு கொடுத்து அவற்றை நாம் மேற்கொள்ளாமல் இருந்தோம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: