நிறுத்திவைக்கப்பட்ட 11.5 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையினை இலங்கை கிரிக்கெட்டிற்கு வழங்க ஐ.சி.சி இணக்கம்!

Monday, March 4th, 2019

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த 11.5 மில்லியன் அமெரிக்க டொலர் (2 பில்லியனுக்கும் அதிக தொகை) நிதியுதவியை ஶ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு மீள வழங்க சர்வதேச கிரிக்கெட் பேரவை இணக்கம் தெரிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைமையகம் அமைந்துள்ள துபாயில் இன்று இடம்பெற்ற சிறப்பு சந்திப்பின்போதே, இந்த இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிறைவேற்று குழு உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டிருந்ததாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா, முன்னாள் தலைவர் திலங்க சுமத்திபால மற்றும் ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் செயலாளர் மொஹன் டி சில்வா ஆகியோர் இந்த உயர்மட்ட கலந்துரையாடலில் கலந்துக்கொண்டுள்ளனர்.

ஶ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கான நிர்வாக தேர்தலை கடந்த ஜுலை மாதம் நடத்துவதற்கு தவறியதை அடுத்து, சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்ட நிதித் தொகை இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நாட்டில் நிலவிய அரசியல் ஸ்திரமற்ற நிலைமையினால் ஶ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கான தேர்தலை உரிய வகையில் நடத்துவதற்கான இயலுமை விளையாட்டுத்துறை அமைச்சுக்கு காணப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது.

இந்த பின்னணியில் ஶ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கான தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி நடத்தப்பட்டது.

இந்த தேர்தலின் ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் புதிய தலைவராக ஷம்மி சில்வா தெரிவு செய்யப்பட்டிருந்தார். உரிய வகையில் ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாக தேர்தலை நடத்தி, உரிய நடைமுறைகளை பின்பற்றி அதிகாரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ள பின்னணியிலேயே இந்த நிதியுதவி வழங்குவதற்கான இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து, புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாக குழுவினர், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய நிலையிலேயே இந்த நிதியுதவி வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் தலையீடுகள் இன்றி, ஶ்ரீலங்கா கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் புதிய நிர்வாக குழு, சர்வதேச கிரிக்கெட் பேரவை அதிகாரிகளிடம் உறுதியளித்துள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

Related posts: