நாட்டின் அரசியல் பொறிமுறையில் முழுமையான மாற்றம் அவசியம் – சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தல்!

Saturday, August 22nd, 2020

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் மூலம் கடந்த அரசாங்கம் நாட்டை குழப்பத்தில் ஆழ்த்திய நிலையில் அரசியல் பொறிமுறையில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றைக் கலைக்க ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை நீக்குதல், நாடாளுமன்றின் பதவிக் காலம் நான்கரை ஆண்டுகள் முடியும்வரை கலைக்க முடியாது என்ற ஒரு பிரிவு உள்ளடக்கப்பட்டுள்ளது மாட்டுமல்லாது மர்மமான சுயாதீன ஆணைக்குழுக்களும் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தின என அவர் குற்றம்சாட்டினார்.

19 ஆவது திருத்தத்தின் உட்பிரிவின் காரணமாக மார்ச் மாதம் வரை நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதியால் முடியவில்லை, இது நாடாளுமன்றம் அதன் பதவிக் காலத்தின் நான்கரை ஆண்டுகள் இயங்கும் வரை கலைக்க முடியாது என்பதனாலேயே என தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தில் உள்ள அதிகாரங்கள் நாட்டை சீர்குலைப்பதற்காக கடந்த அரசாங்கத்தால் அகற்றப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் ஜனாதிபதி தனது கொள்கை அறிக்கையில் ஒரு புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்தி நாடாளுமன்றத்தை பலப்படுத்துவதாக உறுதியளித்தார் என்றும் தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டினார்.

2015 ஆம் ஆண்டில் ‘நல்லாட்சி அரசாங்கத்திடம்’ நாடு ஒப்படைக்கப்பட்டபோது, பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.7 சதவீதமாகவும், 2020 ல் நாடு திரும்ப ஒப்படைக்கப்பட்டபோது, பொருளாதார வளர்ச்சி விகிதம் வெறும் இரண்டு சதவீதமாகவும் இருந்தது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: