நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது குறித்து ஆணைக்குழு கூடி தீர்மானிக்க வேண்டும் – ஆணைக்குளுவின் தலைர் மகிந்த தேசப்பிரிய !

Wednesday, April 29th, 2020

நாடாளுமன்றத்திற்கான தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு கூடி தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்துள்ள தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தேர்தலை நடத்துவது தொடர்பாக அதனுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா வைரஸ் காரணமாக தேர்தலை மறு திகதி அறிவிக்காமல் ஒத்திவைக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் நான்கரை ஆண்டுகளுக்கு பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும் என்று அரசியலமைப்புச் சட்டத்தில் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த மார்ச் 2 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்து ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தலை அறிவித்து வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.

ஆனாலும் கொரோனா வைரஸ் காரணமாக தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலையில், தேர்தல் ஆணைக்குழு தேர்தலை மறுதிகதி அறிவிக்காது ஒத்திவைத்தது. எனினும் கடந்த வாரம் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடிய தேர்தல் ஆணைக்குழு பொதுத் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடத்துவதாக அறிவித்து வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தது. எவ்வாறாயினும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய பழைய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாத காலத்திற்குள் புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும். அவ்வாறு கூட்டப்படாது போனால் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய பழைய நாடாளுமன்றம் தானாக கூட்டப்படும் என சட்டத்தரணிகள் கூறி வருகின்றனர். நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான விடயத்தில் இலங்கையில் மீண்டும் அரசியலமைப்பு நெருக்கடி நிலைமை ஏற்படலாம் எனவும் சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: